செய்யுள்நலம் - சொல்லாட்சி - இயற்கை வருணனைகள் - நாட்டு நகர வளங்கள் யாவும் சேர்ந்து அத்திருமுறையைப் பலமுறை படிக்கத் தூண்டுகின்றன. இலக்கிய ஆசிரியர் கையாளும் எல்லா உத்திகளையும் இவர் மேற்கொண்டுள்ளார். இவற்றோடு கூட சிவபெருமானின் பெருமை - திருவிளையாடல்கள் - தன் வாழ்வில் கிடைத்த இறைவனின் அருட்பாங்கு, எல்லாவற்றையும் பதிகந்தோறும் அழகு பெறச் சுட்டிச் செல்கிறார். இப்படியாகப் பரந்து விரிந்த பாநலத்தை - பாற்கடலுள் ஒரு துளியைச் சுவைத்திட முயற்சி செய்வோம். எழுமையும் அடிமை: எழுமை என்றும் எழுபிறப்பு என்றும் ஆளப்படும் சொல்லாட்சி வள்ளுவரிடத்தே உண்டு. "எழுபிறப்பும் தீயவை தீண்டா" (குறள் 62) "எழுமையும் ஏமாப்புடைத்து" (குறள் 398) என்று அதனை ஏற்ற இடத்தில் போற்றி வைப்பர். மற்றைத் தெய்வங்களை மதிக்காத ஆரூரரும் சிவபரத்துவத்தைப் பற்றிப் பல இடங்களில் உயர்த்திச் சொல்கிறார். இவரிடத்தே காணப்படும் முன்னிய முனைப்புக் குணம் இது வொன்றே! செஞ்சடை வானவனின் திருவடித் தொண்டிற்கே தான் ஆட்பட்டமையைத் தெளிவாக விளக்குவார், "வைத்தனன் தனக்கே தலையுமென் நாவும் | நெஞ்சமும் வஞ்ச மொன் றின்றி | உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை" | (தி. 7 ப. 14 பா. 1) |
என்பது இவரது வாக்கு. இன்னும் தனது எண்ணங்களை, 'கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழு தெழுவேன்' (தி. 7 ப. 14 பா. 8 'ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன்' (தி. 7 ப. 14 பா. 11) 'எங்கும் நாடியும் காண்பரியானை ஏழையேற் கெளிவந்த பிரானை" (தி. 7 ப. 68 பா. 5) என்றெல்லாம் வெளிப்படுத்துவார்.
|