பக்கம் எண் :

71
 

கற்பனை கடந்த கடவுள்:

நமது கற்பனைக்கு எட்டாத வடிவமும் குணங்களும் உடைய இறைவனே நம்முள்ளே ஆயிரமாயிரம் கற்பனைகளைத் தோற்றுவிக்கிறான். கற்பனை கற்பித்த கடவுளை வன்தொண்டர் - பழவினை போக்கும் பரமனாகவும், செய்வினை அறுத்திடும் செம்பொன்னாகவும், பிறவி வேரறுக்கும் பெருமானாகவும் விமரிசிக்கிறார்.

'கல்இயல் மனத்தைக் கசிவித்துக் கழலடி
காட்டி யென் களைகளை அறுக்கும்'

(தி. 7 ப. 67 பா. 5)

'பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுகடல் பரப்புத் தவிர்ப் பானை'

(தி. 7 ப. 67 பா. 7)

'அல்லல் உள்ளன தீர்த்திடு வானை'

(தி. 7 ப. 56 பா. 10)

'ஓயுமாறு நோய் புணர்ப் பானை
ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை'

(தி. 7 ப. 56 பா. 8)

'பறியா வினைகள் அவைதீர்க்கும் பரமா'

(தி. 7 ப. 89 பா. 4)

'மலந் தாங்கிய பாசப் பிறப்பறுப்பீர்'

(தி. 7 ப. 82 பா. 6)

என்று வினைதீர்க்கும் விமலனைப் பற்றிப் பேசுவார்.

சோதியாய்த் தோன்றும் உருவமே யருவாம்

ஒருவனே சொல்லுதற் கரிய

ஆதியே நடுவே அந்தமே பந்தம்

அறுக்குமா னந்தமா கடலே

தீதிலா நன்மைத் திருவருட் குன்றே

திருப்பெருந் துறையுறை சிவனே

யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்

வந்துநின் இணையடி தந்தே.

(தி. 8 கோயில் திருப். 9)

என்று மணிவாசகப் பெருமானும் பந்தம் அறுக்கும் பரம்பொருளின் பெருமையைப் பேசுகிறார். பிள்ளை மதியணிந்த பிரானே முதற்கடவுள் என்பதில் நம்மவர்க்குத் தனிப் பெருமை உண்டு.