பக்கம் எண் :

704
 
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக

லூரைப் பாடுமின் புலவீர்காள்

அடுக்கு மேலம ருலகம் ஆள்வதற்

கியாதும் ஐயுற வில்லையே.

2



'இவன் கொடைக்குப் பாரியே போல்வான்' என்றும் இல்லது கூறிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், நீற்றைக்கொண்ட திருமேனியையுடைய எம் புண்ணிய வடிவினனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், பல உலக அடுக்கிற்கும் மேல் உள்ள அமரரது உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.

கு-ரை: 'வாழ்தல் வேண்டிப் பொய்கூறாது மெய்யே கூறுதலும் (புறம்-139) செய்யா கூறிக் கிளத்தலை எய்யாமையும் (புறம்-148) ஆகிய புலவர் பண்புகளின் நீங்கிப் பாடினும் கொடுப்பார் இல்லை' என்றவாறு.

பாரி போல்வார் சிலர் எக்காலத்தும் உளரல்லரோ எனின், அதுபற்றிக் கொடுப்பார் உளர் என்னார் ஆசிரியர். என்னையெனின்,

''உரையும் பாட்டும் உடையோர் சிலரே
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே''

(புறம்-27)

என்றும்,

''பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன்
றீயாது வீயும் உயிர்தவப் பலவே''

(புறம்-235)

என்றுஞ் சொன்னாராகலின், அவர்தாம் ஒரோவொருகாலத்து ஒரோவொரிடத்துத் தோன்றி நிற்றலன்றி எஞ்ஞான்றும் எவ்விடத்தும் இல்லாமையும், உளராயவழியும் சிலரைச் சிலபோது புரத்தலன்றிப் பலரையும் பலகாலத்தும் புரவாமையும் தெளியப்படுதலால், கடலில் இட்ட காயம்போலச் சிறுபான்மைத்தாய அது, பெரும்பான்மைத்தாய பலர்க்கும் வாழும் வழியாகாமைபற்றி என்க.

''மிடுக்கிலாதான்'' என்றும், ''கொடுக்கிலாதான்'' என்றும்