பக்கம் எண் :

723
 
362.சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல்

வாய பாம்பது மூசெனும்

பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற்

பாம்பு வேண்டா பிரானிரே

மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும்

மன்னு காரகில் சண்பகம்

அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில்

ஆர ணீய விடங்கரே.

2



திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில்வாழும் அழகரே, நீர் வெண்மையான தலையோட்டினைக் கையிற்கொண்டு ஊரெலாந் திரிந்து என்ன பெறப் போகின்றீர்? இவ் வோரிடத்திற்றானே நீர் வேண்டிய அளவினதாகிய பிச்சையைப் பெற்றுக்கொள்வீர்; அது நிற்க; உமக்கு முத்து வடமாவது, பாம்புதானோ? சொல்லீர்.

கு-ரை: இஃது அவர் தமது ஆரமாக மார்பில் பாம்பினை அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது. ''கண்டர்'', அண்மைவிளி. செய்தல், ஈட்டுதல், ''பணியும்'' என்றது, 'பணி' என்னும் பெயரடியாகப் பிறந்த செய்யும் என்னும் எச்சம். ''ஆரணீயம்'' என்றது, நீட்டும்வழி நீட்டல்.

2. பொ-ரை: இறைவரே, மலையின்கண் பிறந்த, 'சந்தனம், வேங்கை, கோங்கு, மிக்க கரிய அகில், சண்பகம்; என்னும் மரங்களை அலைத்துக்கொண்டு வரும், தண்ணிய நீர் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கின்ற, காட்டில் வாழும் அழகரே, நுமது வெள்விடை முழக்கமிட்டுச் சினந்து பார்க்கின்றது, சிவந்த நெருப்புப் போலும் நஞ்சினைக் கொண்ட வாயினையுடைய பாம்பு, 'மூசு' என்னும் ஓசையுண்டாகச் சீறுகின்றது; ஆதலின், நீர் பிச்சைக்கு வரும் போது கையில் பாம்பையேனும் கொண்டுவருதல் வேண்டா.

கு-ரை: இஃது அவர் தமது கையிற் பாம்பினைப் பிடித்து ஆட்டுதலைக் கண்டு அஞ்சியவள் கூறியது. ''செந்தழல்'' என்றது, அடையடுத்த உவம ஆகுபெயராய், நஞ்சினைக் குறித்தது. விடையையும் வேண்டா என்றலே கருத்தாகலின், ''பாம்பு வேண்டா'' என்றதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. 'மலைத்த' என்பதற்கு, 'மேலே கொண்ட' என்றும், 'முரித்த' என்றும் உரைத்தலுமாம். பசுமை, இங்குத் தண்மை மேற்று.