பக்கம் எண் :

730
 

37. திருவாரூர்

பதிக வரலாறு:

சங்கிலிநாச்சியாரை மணந்த சுந்தரர், திருவொற்றியூரை நீங்கியதால் இழந்த கண்களில் காஞ்சியில் ஒரு கண்ணைப் பெற்று, திருத்துருத்தியில் பிணி நீங்கப் பெற்று. பல தலங்களையும் வணங்கிக் கொண்டு திருவாரூர் அடைந்து, முதலில் பரவையுண்மண்டளிப் பெருமானை, ''தூவாயா' என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித்தொழுதார். பின்னர், திருமூலட்டானரை வழிபட அர்த்தயாம வழிபாட்டிற்குச் செல்லும் பொழுது அன்பர்கள் எதிரணையக் கண்டு அயலார் வினவுவதுபோல. ''கைக்கிளை'' என்னும் அகப்பொருள் துறையமையப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 305)

குறிப்பு: இத்திருப்பதிகம், திருவாரூர்ப் பெருமானிடத்துக் காதல் கொண்டாள் ஒருத்தி, அக்காதல் மிகுதியால் பறவைகளையும், வண்டுகளையும் நோக்கிச் சில கூறுங் கூற்றாக அருளிச்செய்தது. சுவாமிகள், திருவாரூர்ப் பெருமான் தமக்கு அருளாமையால் வருந்திய வருத்தத்தினை அடியவரிடம் தெரிவித்துக் கொள்ளுதல் குறிப்பினால் தோன்ற, இவ்வாறு பிறிதோராற்றாற் புலப்படுத்தியருளினார் என்க.

பண்: கொல்லி

பதிக எண்: 37

திருச்சிற்றம்பலம்

372.

குருகுபா யக்கொழுங் கரும்புக ணெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தண்ஆ ரூரரைப்
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.

1



1. பொ-ரை: குருகுகளே, நீங்கள் பறந்து உலாவுவதனால் செழுமையான கரும்புகள் நெரிந்து பெருகிய சாறு, அருகாகச் சென்று பாய்கின்ற வயல்களையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை, யான் உள்ளத்தால் திளைக்கின்றவாறும், திசைநோக்கி வணங்கித் துதிக்கின்றவாறும், நினைந்து நெஞ்சு உருகுகின்றவாறும் ஆகிய இவைகளை என் பொருட்டு அவர்க்குத் தெரிவிக்க வல்லீர்களோ?