பக்கம் எண் :

731
 
373.

பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கணென் னத்தகும் அடிகள்ஆ ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.

2


374.

சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்
ஆளும்அம் பொற்கழல் அடிகள்ஆ ரூரர்க்கு
வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக்
கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.

3



கு-ரை: ''குருகு'' என்னும் அஃறிணை இயற்பெயர் பன்மை குறித்து நின்று, அண்மை விளிஏற்றது. ''குருகு'' என விளித்தமையின், வாளா, ''பாய'' என்றாள். குருகு, ''பறவைப் பொது' எனவும், 'நீர்ப்பறவை' எனவும், 'அன்னம்' எனவும் கூறுப. 'வல்லீர்களோ' என்றது, 'அத்துணை இரங்குவீரோ' என்றபடி.

2. பொ-ரை: பறக்கும் இயல்புடைய எங்கள் கிளிகளே, பாடும் இயல்புடைய எங்கள் நாகணவாய்ப் புட்களே, அறத்திற்குக் கண் என்று சொல்லத் தக்க தலைவராகிய திருவாரூர் இறைவரை, யான் ஒரு ஞான்றும் மறக்க இயலாமையையும்,. அது காரணமாக எனது கைவளைகள் நில்லாது கழன்று வீழ்தலையும், கண்கள் உறங்குதல் இல்லாமையையும், என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ?

கு-ரை: பறக்குந் தன்மையால் விரையச் செல்லவும், பாடுந் தன்மையால் சொல்லவும் வல்லீர்கள் என்பது குறிப்பு. தன்னாலும், தன் தோழியராலும் வளர்க்கப்படுவனவாகலின், 'எம் கிள்ளைகாள் எம்பூவைகாள்' என உரிமை தோன்றக் கூறினாள். பறத்தலையும், பாடுதலையும் ஒவ்வொன்றற்கே உரித்தாகக் கூறினாளாயினும், இரண்டும் இரண்டற்கும் உரியனவாகக் கூறுதலே கருத்தென்க. அறத்திற்குக் கண் எனப்படும் தகுதியாவது. செல்லும் நெறியையும், செல்லா நெறியையும் அதற்கு அறிவிக்கும் தலைமை.

3. பொ-ரை: சுற்றிலும் ஓடிச் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே, அடியவர்களை ஆளுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, யான் இவ்வுடம்பின் நீங்காது வாழுமாறும், என்வளைகள் கழலுமாறும், மாறாத முறையும் என்னிடத்து மாறி நிகழுமாறும் ஆகிய இவைகளை என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?