பக்கம் எண் :

732
 
375.சக்கிரவா கத்திளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங் கள்செயும் அடிகள்ஆ ரூரர்க்கு
வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உக்கிரமில் லாமையு முணர்த்தவல் லீர்களே.

4



கு-ரை: 'கவலையற்றுத் திரிகின்ற நீங்கள் என்னையும் அவ்வாறு செய்மின்' எனபாள், ''சூழும் ஓடிச் சுழன் றுழலும்வெண் ணாரைகாள்' என விளித்தாள். 'சூழ்' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், அதனையுடைய இடத்திற்கு ஆயிற்று. அஃது எல்லா இடங்களையும் குறித்தலின், முற்றும்மை பெற்றது. ''ஆளும்'' என்றது, இன எதுகை; 'ஆழும்' எனப் பாடம் ஓதினும் இழுக்காது. 'உடம்பின் நீங்காது வாழுமாறு' என்றது, 'இறவாமை மட்டிலே உளதாக, ஏனைய எல்லா நலங்களும் போயொழிந்த' என்றபடி ''மாறும்'' என்றதில், மாறு முதனிலைத் தொழிற்பெயர். மாறாத முறைமையாவது, ''சான்ற வர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் - தாங்காது மன்னோ பொறை'' (குறள் - 990) என்பது. அது மாறி நிகழ்தலாவது, அச்சான்றாண்மைக்கு எல்லையாகிய திருவாரூர் இறைவர்தாமே, 'அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை' (குறள் - 986.) என்னும் அடிநிலைகளை அகற்றி, தம் பொருட்டு இறந்துபாடெய்தும் பெண்ணொருத்தியைக் கடைக்கணியாது வாளாவிருத்தல். சுவாமிகள், தம்மிடத்து இறைவர் இவ்வாறிருத்தலை, இம்முறையாற் குறித்தருளினார் என்க. முறை பிறழாதாரைப் பற்றியும் இவ்வாறு முறையிடுதல், ஆற்றாமையுடையார்க்கு இயல்பென்க. ''எனக்கு'' என்றது. உருபு மயக்கம்.

4. பொ-ரை: 'சக்கிரவாகம்' என்னும் இனத்து, இளைய பேடைகளே, சேவல்களே, முறையல்லாதவற்றைச் செய்கின்ற தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, யான் மனம் மாறுபடாமையையும், எனது வளைகள் நில்லாது கழலுதலையும், அவர்மீது புலவி தோன்றாமையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?

கு-ரை: 'சக்கிரம்' முதலாக நிற்பினும், இசைகெடாதாகலின், '்சக்ரம்' என்றாற்போல ஆரியமாகப் பாடம் ஓதுதல் வேண்டாவென்க, பறவைப் பெயர், சக்கிரவாகமேயன்றி, சக்கிரவாளம் அன்று. பேடைகளை முன்னே விளித்தாள். அவை தனக்கு இரங்கும் என்னுங் கருத்தால், சேவல்களையும் விளித்தாள். அவை ஆரூரரது அக்கிரமங்களை எடுத்துச் சொல்லும் என்னுங் கருத்தால். அக்கிரமங்கள், மேற்கூறியன. மனம் மாறுதலாவது, வேறொருவரைத் தலைவராக ஏற்க நினைத்தல். புலவாமையைக் கூறியது, தனது எளிமையைக் குறித்தற்பொருட்டு. இங்கும், சுவாமிகள், தம் நிலையை இவ்வாற்றாற் குறித்தருளினார் என்க.