பக்கம் எண் :

761
 

40. திருக்கானாட்முள்ளூர்

பதிக வரலாறு:

வன்றொண்டர், திருவாழ்கொளிபுத்தூரைத் தொழுது திருக்கானாட்டுமுள்ளூரை யடையும்பொழுது பெருமான் காட்சிகொடுக்கக் கண்டு ''இறைவரது செம்மையாகிய திருவடி மலர்களைக் கண்டு தொழுதேன்'' என்ற கருத்தினைப் புலப்படுத்திப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 120)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவன் எல்லாமாய் நிற்கும் தன்மையை வகுத்து அருளிச்செய்தது.

பண்: கொல்லிக்கௌவாணம்

பதிக எண்: 40

திருச்சிற்றம்பலம்

404.

வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை

மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்

புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கிஉமிழ்ந் தானைப்

பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை

முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று

மொட்டலர்ந்து விரைநாறு முருகுவிரி பொழில்சூழ்

கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

1



1. பொ-ரை: கூரிய வாயை உடைய பிறை ஒளிரும் நீண்ட சடையை உடையவனும், 'வேதம், வாயாற் சொல்லப்படும் பிற சொற்கள், இந்திரன், திருமால், பிரமன்' என்னும் பொருள்களாய் உள்ளவனும் ஆகிய இறைவனை, அடியேன், தாழையரும்புகள், வளைந்த தாழை மரத்தினால் ஈன்றிடப்பட்டு, முட்களையுடைய வாயினையுடைய இதழ்களைப் பொருந்தி மலர்ந்து மணம் வீசுகின்ற, தேன் மிகுந்த சோலைகள் சூழ்ந்த, மதுவொழுகும் வாயினையுடைய கருங்குவளை மலர்கள் கண்ணுறங்குவது போலக் காணப்படுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!

கு-ரை: 'என் தவப்பயன் இருந்தவாறு' என்பது குறிப்பெச்சம்.