பக்கம் எண் :

762
 
405.

ஒருமேக முகிலாகி யொத்துலகந் தானாய்

ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்

பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்

புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்

திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த

திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்கும்

கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

2



அரிவாள் போலும் வடிவம் பற்றிப் பிறையை, ''வள் வாய பிறை'' என்று அருளினார். 'வாள்' என்றது குறுகி நின்றது எனினுமாம். திருமால் கண்ணனாய் இருந்த பொழுது கொக்குருவாய் வந்த அசுரனை, அதன் வாயைக் கிழித்துக் கொன்ற வரலாற்றினைப் பாகவதத்துட் காண்க.

திருமால் நீருக்குத் தலைவனாதலாலும், மண் நீரில் தோன்றி நீரில் ஒடுங்கும் என்பர் ஆதலாலும் திருமாலை உலத்தை உண்டு உமிழ்பவன் என்றல் வழக்கு பொன்போலும் நிறமும், மார்பில் முப்புரிநூலும், நான்கு முகமும் பிரமனுக்கு உண்மை அறிக.

2. பொ-ரை: உலகிற்கு ஒருபெருந் துணையாய் உள்ள மேகமாகியும், தம்முள் ஒத்த உலகங்கள் பலவும் தானேயாகியும், அவற்றில் உள்ள ஊர்வனவும், நிற்பனவுமாகிய உயிர்களும், அவற்றின் தோற்ற ஒடுக்கங்கட்குக் காரணமாகிய ஊழிக் காலங்களும் தானே யாகியும், அலையால் கரையை மோதுகின்ற கடல்களாகியும், ஐந்து பூதங்களாகியும் அவற்றைப் படைத்து நிற்பவனும், அறவடிவினனும், புரிந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருமகளும் விரும்பத்தக்க செல்வத்தை உடையவர்களது மாளிகைகளும், முத்தீயையும் வளர்க்கின்ற மேலான தகுதியுடைய அந்தணர்கள் வேதத்தை ஓதி வாழ்கின்ற மாளிகைகளும் உள்ள இடங்களிலெல்லாம், கரிய எருமைகள் செந்தாமரை மலர்களை மேய்கின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!

கு-ரை: 'மேகமுகில்' ஒருபொருட் பன்மொழி. 'ஒத்த' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. நகர் - மாளிகை. இதனை, ''செல்வத்தார்'' என்றதனோடும் கூட்டுக. மாளிகைகள் வயல்களின் நடுவே உள்ளன என்க.