41. திருக்கச்சூர் ஆலக்கோயில் பதிக வரலாறு: தம்பிரான் தோழர் திருக்கழுக்குன்றத்திறைவரை வணங்கி, திருக்கச்சூர் சென்று ஆலக்கோயிலில் அமர்ந்தருளும் பெருமானைத் தொழுது புறத்தேவந்து, அமுதுசெயும் வேளையாகையால் பசிவருத்த மதிலின்புறத்தே தங்கினார். வன்றொண்டரின் பசி தீர்க்க விரும்பிய பெருமான், அந்தணர வடிவுடன் திருவோட்டைக் கையில் தாங்கி வந்து 'பசியால் வருந்தியிருக்கின்றீர்; நும் பசிவேட்கை நீங்க, சோறு இரந்து கொணர்கின்றேன். அப்புறம் அகலாது இங்கே இரும்' எனக் கூறி, கடும் பகற்போதில் மனைதொறும் சென்று பலியேற்று வந்து, 'உம்மை வருத்தும் பசிதீர உண்ணும்' என்று கூறிக்கொடுத்தார். நாவலூரரும் காதல் மிகத் தொழுது வாங்கித் தொண்டர்களுடன் உண்டு உவந்திருந்தார். அந்தணர் வடிவில் வந்த பெருமானும் அருகில் நிற்பவர்போல் அவர் அறியாமல் மறைந்தருளினார். ஆளுடைய நம்பிகளும், 'பெருமானே மறையவர் வடிவில் சேவடி வருந்த எழுந்தருளினான்' என உணர்ந்து மனமருகிக் கண்ணீர்மழை அருவிபாயப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 182) குறிப்பு: இத்திருப்பதிகம் நுதலிய பொருள், இதன் வரலாற்றானே விளங்கும். பண்: கொல்லிக்கௌவாணம் பதிக எண்: 41 திருச்சிற்றம்பலம் 415. | முதுவாய் ஓரி கதற முதுகாட் | | டெரிகொண் டாடல் முயல்வானே | | மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் | | மலையான் மகள்தன் மணவாளா |
1. பொ-ரை: பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங்காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே, கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற, மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற
|