417. | சாலக் கோயில் உளநின் கோயில் | | அவைஎன் தலைமேற் கொண்டாடி | | மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன் | | வானோ ரறியா நெறியானே | | கோலக் கோயில் குறையாக் கோயில் | | குளிர்பூங் கச்சூர் வடபாலை | | ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ் | | அறங்க ளுரைத்த அம்மானே. | | 3 |
மனம் உருகமாட்டாரோ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம். கு-ரை: கழல் வலத்திருவடியிலும், சிலம்பு இடத்திருவடியிலும் உள்ளன என்க. 'போது உச்சம் ஆ' என மாற்றி, சிறப்பும்மை விரிக்க. 'இரத்தல் உனக்கு வேண்டுவதின்று; அங்ஙனமாகவும் இரக்ின்ற உனது கருத்தினை யாம் அறிகின்றிலேம்' என்றவாறு. இருவகை ஏழ்பிறப்புக்களாவன, வினைப்பயன் தொடரும் ஏழ்பிறப்பும், தாவரம் முதல் தேவர் ஈறாக உள்ள ஏழ்பிறப்புமாம்; ''எழுமை எழுபிறப்பு'' (குறள்-106) என்றது காண்க. ''அச்சம்'' என்றது, நாணத்தை. ''வடபால்'' என்றதற்கு, 'ஆலநிழலில்' என்றுரைத்து, 'ஆலக்கோயில்' என்றதன் காரணம் விளக்கியவாறு என்றலுமாம். 3. பொ-ரை: தேவரும் அறிய ஒண்ணாத நிலையையுடையவனே, அழகுடையதும், குறைவில்லாததும் ஆகிய, குளிர்ந்த அழகிய திருக்கச்சூர் வடபால் ஆலக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற, கல்லால் நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கு அறங்களை உரைத்த பெருமானே, உனது கோயிலாகப் பல கோயில்கள் இம் மண்ணில் உள்ளன; அவற்றை யெல்லாம் என்தலைமேல் வைத்துப் புகழ்ந்து, மயக்கமுந் தீர்ந்தேன்; வினையையும் ஓட்டினேன்; இங்குள்ள கோயிலைப் புகழ்ந்து, நீ இரந்து சோறிடப்பெற்றேன். கு-ரை: வருவித்துரைத்தது, இசையெச்சம். மயக்கம், இவ்வுலகின்பத்தைப் பெரிதாக நினைத்தல்; வினை, அந்நினைவின் வழியே முயலுதல். ''வடபாலை'' என்னும் ஐகாரம் சாரியை. ''கொண்டாடி'' என்னும் எச்சம், காரணப் பொருட்டு. 'அறங்கட்டுரைத்த' என்றும் பாடம் ஓதுவர்.
|