420. | பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் | | பெற்ற மேறிப் பேய்சூழ்தல் | | துறவாய் மறவாய் சுடுகா டென்றும் | | இடமாக் கொண்டு நடமாடி | | ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் | | கண்டால் அடியார் உருகாரே | | அறவே யொழியாய் கச்சூர் வடபால் | | ஆலக் கோயில் அம்மானே. | | 6 |
காலையில் எழுந்து உன்னை வணங்குவாரது மனக்கவலையை அடியோடு நீக்குபவனே, நீலகண்டத்தை யுடையவனே, மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன்போல்பவனே, மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே, வயல்கள் நிறைந்த, கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, அடியேன் உன்னை மறவேன். கு-ரை: திருக்கச்சூரில், பெருமான், மலைமேற் கோயில் கொண்டிருத்தலின், ''மலைமேல் மருந்தே'' என்று அருளிச் செய்தார். 'கழனி' என்பது, 'இடம்' என்னும் பொருளதாய் நின்றது. 'வினையின் பயனே' என்பதும் பாடம். 6. பொ-ரை: பிறவாதவனே, இறவாதவனே, யாதொன்றையும் விரும்பாதவனே, மூப்படையாதவனே. இடபத்தை ஏறிப் பேயாற் சூழப்படுதலை விடாதவனே, மறதி இல்லாதவனே, என்றும் சுடுகாட்டையே இடமாகக்கொண்டு நடனம் ஆடுபவனே, திருக்கச்சூரில் வடபால் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ, உடைந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால், உன் அடியவர் மனம் வருந்தமாட்டாரோ? இதனை அறவே ஒழி. கு-ரை: ஆற்றாமையால், ''அறவே ஒழியாய்'' என்றாரேனும், ஒழியாமையைப் பாராட்டுதல் திருவுள்ளமாகலின், ஈண்டும் "அதுவே யாமாறிதுவோ'' என்பது வந்தியைவதேயாம். ஒறுவாய் - மூளியான வாய். ''முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி'' என்னும் பெரும்பாணாற்றுப் படை (98, 99) அடியின் உரையைக் காண்க.
|