பக்கம் எண் :

777
 
424.அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்

ஆலக் கோயில் அம்மானை

உன்ன முன்னு மனத்தா ரூரன்

ஆரூ ரன்பேர் முடிவைத்த

மன்னு புலவன் வயல்நா வலர்கோன்

செஞ்சொல் நாவன் வன்றொண்டன்

பன்னு தமிழ்நூல் மாலை வல்லா

ரவர்என் தலைமேற் பயில்வாரே.

10

திருச்சிற்றம்பலம்


10. பொ-ரை: அன்னங்கள் நிலைத்து வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது கருணையையே நினைகின்ற மனத்தினால், 'ஆரூரன்' என்று, திருவாரூர் இறைவனது பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும், செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும், வயல்களை உடைய திருநாவலூருக்குத் தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய, தமிழ் இலக்கணம் அமைந்த இப்பாமாலையைப் பாடவல்லவர், என் தலைமேல் எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர்.

கு-ரை: 'உன்னம்' என்பது, நினைவாகலின், இறைவனுக்கு அஃது அருளேயாதல் பற்றி, 'கருணை' என்று உரைக்கப்பட்டது. ''ஆரூரன்'' என்றதனை, 'வன்றொண்டன்' என்றதன் பின்னர்க் கூட்டுக. ''நூல்'' என்றது. நூலிற் சொல்லப்பட்ட இலக்கணத்தைக் குறித்தது. ''நூல்'' என்ற பொதுமையான், 'இயற்றமிழ் நூல், இசைத் தமிழ் நூல், என்னும் இரண்டனையுங் கொள்க. ''என்தலைமேல் பயில்வார்'' என்றது, 'சிவனடியாராவர்' என்றவாறாம்; என்னை? சுவாமிகள் தந் தலைமேல் பயில்வார் அவரே யாகலின். 'எம் தலைமேல்' என்பதும் பாடம்.