பக்கம் எண் :

786
 

43. திருமுதுகுன்றம்

பதிக வரலாறு:

தம்பிரான்தோழர் திருக்கூடலையாற்றூர்ப் பெருமானைத் தொழுது திருமுதுகுன்றமடைந்து வணங்கிப் பாடி யருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 105)

குறிப்பு: இத்திருப்பதிகம் இறைவரிடத்துத் தமக்குள்ள உரிமையால், 'அடியவர்கட்கு நீர் இப்பொழுதே அருள் செய்யவேண்டும்' என்று வலியுறுத்தி அருளிச் செய்தது.

பண்: கொல்லிக்கௌவாணம்

பதிக எண்: 43

திருச்சிற்றம்பலம்

435.நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை ந்சுவார்
துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே.

1



1. பொ-ரை: முஞ்சிப் புல்லின் புதல்மேல் சங்கு தங்கி ஒலிக்கின்ற புகழையுடைய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, எங்கள் தலைவரே, உம்மை நெஞ்சுருகி விரும்புகின்ற அடியவர், 'நீர் அருள் செய்யும் காலம் இன்று வாய்க்கும்; நாளை வாய்க்கும்' என்று எண்ணிக் கொண்டேயிருந்து இறந்துவிட்டால், அதன்பின்பு நீர் அவர்களுக்குச் செய்வது என்ன இருக்கின்றது? பஞ்சியை அடைப்பதனால் குடுக்கை உடைந்து விடுமோ? விரைந்து அருள்புரியீர்.

கு-ரை: இடை - செவ்வி. ''பஞ்சியிடப் புட்டில் கீறுமோ'' என்றது, 'எங்களுக்கு உதவும் சிறுபொறையை மேற்கொள்வதனால், நீர் கெட்டுவிடுவீரோ' என்பதனை உள்ளுறுத்து அருளிய உள்ளுறை உவமம். ''பணியீர்'' என்றது, 'தாரீர்' என்றவாறு. முஞ்சிப் புதல், மணி முத்தாற்றின் இருமருங்கிலும் உள்ளனவென்க. தருப்பையையும், 'முஞ்சி' என்ப.