பக்கம் எண் :

810
 
471.

மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து

வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்

தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்

சுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம்

பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்

பண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக்

கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

5



5. பொ-ரை: அழகரே. கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது. வன்கண்மை கொண்டு திரிந்தும், வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும், காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் உம் மனம் வேண்டியவாறே திரிவீர்; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும்! ஏனெனில், முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ! 'கண்டோம்' என்பார்க்கும், அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே. நீண்டு நின்றீரல்லிரோ? அதனால், நும் இயல்பையெல்லாம் விடுத்து, உமது கருவூலத்திலிருந்து நறுமணம், ஆடை, ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும்.

கு-ரை: காரியக் கேடாவன, 'துஞ்சலும், துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தோறும்' (தி. 3 ப. 22 பா. 1) என்றாற்போலவும், 'ஆக்கைக்கு இரைதேடி அலமராதீர்கள்; பூக்கைக் கொண்டு என் பொன்னடி போற்றுமின்; நாக்கைக்கொண்டு என் நாமம் நவிலுமின்" (தி. 5 ப. 90 ப. 5) என்றாற்போலவும் சொல்லி, பிற முயற்சிகளையெல்லாம் விலக்குதல், "தலைக்கு" என்ற தனை, 'தலைக் கண்' எனத் திரிக்க. தொண்டு கொண்டு ஆள உடம்பட்டமையை, தலைக்கண் ஏற்றுக் கொண்டவாறாக அருளினார். "ஏற்றும் திரிவீர்" என மேலே சென்று இயையும், இறைவனை, அடைந்தார்க்கும் அவனை அகப்படுத்தியறிதல் இயலாது என்பது.


கடலலைத்தே யாடுதற்குக் கைவந்து நின்றும்
கடலளக்க வாராதாற் போலப் - படியில்
அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவு மெல்லாம்
கருத்திற்குச் சேயனாய்க் காண்.

- திருக்களிற்றுப்படி. 90