பக்கம் எண் :

811
 
472.

இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்

இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது

பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்

பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ

உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட

உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே

கலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

6


என்றதனால் விளங்கும், ஆகவே, இறைவனை அகப்படக் கண்டார் உளர் என்பதற்குப் பிரமாணம் இன்மை யறிக. "சுந்தரனே" என்பது பன்மை யொருமை மயக்கம் 'சுந்தரரே' என்று ஓதுதலுாம்.

6. பொ-ரை: தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற, செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு, பூதங்கள் இசையைப் பாட, பலரும் இடுகின்ற பிச்சைக்கு, வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர்; ஆயினும், நீர் அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது, அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே; அங்ஙனமாக, இப்பொழுது எனக்குப் பட்டும், சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ!

கு-ரை: "வேள்வி" விருந்தோம்பல், தீ வளர்த்தல் முதலியவற்றுள் ஏற்பன கொள்க. 'மேலிட' என்பது குறைந்து நின்றது.

பிச்சை எடுப்பீர்போலக் காட்டுதல் நாடக மேயன்றிப் பிறிதில்லை என்பது, நஞ்சுண்டு தேவரைக் காத்தமையாலே நன்கு விளங்குகின்றது; ஆதலின், எனக்குப் பட்டும் சாந்தும் பணித்தருளாதிருத்தல், கரப் பேயன்றி வேறில்லை' என்றார் என்க.