பக்கம் எண் :

815
 
477.

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்

பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்

உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்

ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்

கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென்

றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன

அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.

11

திருச்சிற்றம்பலம்


கு-ரை: உறுதிமொழியாவது, 'மாநிதியந் தருவன்' என்று சொல்லி ஆண்டது, "உண்டேல்" என்பது, காரணப் பொருளில் வரும் 'உண்டாக' என்பதன் பொருளில் வந்தது. இதில், 'உண்டு' என்னும் வினைக் குறிப்பு, இறந்தகாலம் பற்றி வந்தது.

11. பொ-ரை: அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மையால், அவரை, 'கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய 'பரவை சங்கிலி' என்னும் இருவருக்கும், எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே, யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன்? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும்; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும், ஒள்ளிய பட்டாடையும், பூவும், கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற, சந்தனமும் வேண்டும்' என்று வேண்டிப் பாடிய, அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள், அமரர் உலகத்தை ஆள்வார்கள்.

கு-ரை: 'என்குடிமுழுதுமே உன்னைத்தான் சார்ந்துள்ளது' என்றற்கு, "பரவைக்கும், சங்கிலிக்கும், எனக்கும் பற்றாய பெருமானே" என்று அருளினார். மயம் - வடிவம்; தன்மை. "கண்" என்றது, அதன் நோக்கினைக் குறித்தது. கண்டார் பலரும், விரும்பி நோக்குதலின், அது நிறைய உளதாயிற்று. "அண் மயம்" வினைத்தொகை; 'அண்மிய தன்மை' என்பது பொருள். 'அமருலகம்' என்பது முப்பத்துநான்காந் திருப்பதிகத்துள் விளக்கப்பட்டது.