பக்கம் எண் :

839
 

50. திருப்புனவாயில்

பதிக வரலாறு:

நம்பியாரூரர், திருக்கானப்பேரிறைஞ்சிச் சிலநாள் தங்கியிருந்து திருப்புனவாயிலடைந்து பெருமானைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. கழறிற். புரா. 118)

குறிப்பு: இத்திருப்பதிகம், நெஞ்சைத் திருத்த அதனை நோக்கி உறுதி கூறியவாறாக அருளிச்செய்தது.

பண்: பழம்பஞ்சுரம்

பதிக எண்: 50

திருச்சிற்றம்பலம்

508.சித்த நீநினை யென்னொடு சூளறு வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளன்ஊர்
பத்தர் தாம்பலர்ாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.

1



1. பொ-ரை: மனமே, நீ, 'நும் நெறியாற் பயன் கிட்டாது' என்று இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி; மதத்தையுடைய யானையின், உரித்த தோலைப் போர்த்த அழகனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊர், அடியார் பலர், திருப்பாடல்கள் பலவற்றைப்பாடி ஆடுகின்ற பழைய ஊராகிய மரப்பொந்துகளில் ஆந்தைகளின் பாட்டு ஒழியாத திருப்புனவாயிலே; அதனை நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல்.

கு-ரை: ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம். அதனாற் போந்தது, 'யாண்டும் பெறலாகாத பெரும் பேற்றினைப் பெற்று விடுவை' என்பது. 'சூளறும்' என்பது பாடம் அன்று.

சோலைகளில் பகலும் இரவுபோலத் தோன்றுதலின், ஆந்தைகளின் பாட்டு எஞ்ஞான்றும் ஒழியாதாயிற்று. ஏகாரம், பிரிநிலை, அதனை என்பது சொல் லெச்சம். இத்தலத்தில் பாலைநில வருணையே கூறப்படுகிறது.