509. | கருதி நீமனம் என்னொடு சூளறு வைகலும் எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர் பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே. | | 2 |
510. | தொக்காய்மன மென்னொடு சூளறு வைகலும் நக்கானமை ஆளுடை யான்நவி லும்மிடம் அக்கோடர வார்த்தபி ரானடிக் கன்பராய்ப் புக்காரவர் போற்றொழி யாப்புன வாயிலே.> | | 3 |
2. பொ-ரை: மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி; எருதினை ஊர்கின்ற எம்பெருமானுக்கு இடமாய் இருப்பது, இந்திரன் முதலிய தேவர் நீங்காதிருக்கின்ற இடமாகிய, வேடர்கள் வாணிகச் சாத்தோடு போர்செய்தலால், ஆரவாரம் ஒழியாத திருப்புனவாயிலே; அதனை நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல். கு-ரை: இந்திரன் மருதநிலத் தெய்வமாதல் பற்றி, அவன் வழிப்பட்டோரையும், 'மருத வானவர்' என்று அருளினார்; இதற்குப் பிறவாறும் உரைப்ப. திருப்புனவாயில் நெய்தலொடு மயங்கிய பாலைக்கண் இருத்தலின், இத்திருப்பதிகத்துள், பாலைக்கேற்ற அணிந் துரையை அருளுவார், "வேடுவர் பொறாது சாத்தொடு பூசலறாப் புன வாயில்" என்று அருளிச்செய்தார். வருகின்ற திருப்பாடல்களில் இன்ன பிற காண்க. 3. பொ-ரை: அளவற்ற நினைவுகள் பொருந்தி ஆராய்கின்ற மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி. ஆடை யில்லாதிருப்பவனும், நம்மை ஆளாக உடையவனும் ஆகிய சிவ பெருமானுக்கு இடமாய் இருப்பது, எலும்பையும், பாம்பையும் அணிந்த அப்பெருமானுக்கு அன்பராய், அவனையே புகலிடமாக, அடைந்தவர் அவனைப் போற்றுதல் ஒழியாத திருப்புனவாயிலே; அதனை நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல். கு-ரை: "புனவாயிலே" என்றதற்குப்பின், மேலைத் திருப்பாடலில் உள்ளனவெல்லாம் வந்து இறையும். 'தொக்காய மனம்' எனப்பாடம் ஓதுவாரும் உளர். 'அக்கோடர வார்த்தபிரான்' என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது. இத் திருப்பாடல்களில், சீர்மயக்கமும், அடிமயக்கமும் வந்தன பல.
|