511. | வற்கென் றிருத்திகண் டாய்மன மென்னொடு சூளறு பொற்குன்றஞ் சேர்ந்ததொர் காக்கைபொன் னாமதுவேபுகல் கற்குன்றுந் தூறும் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப் புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே. | | 4 |
512. | நில்லாய்மன மென்னொடு சூளறு கைவலும் நல்லான்நமை ஆளுடை யான்நவி லும்மிடம் வில்வாய்க்கணை வேட்டுவ ராட்ட வெருண்டுபோய்ப் புல்வாய்க்கணம் புக்கொளிக் கும்புன வாயிலே. | | 5 |
4. பொ-ரை: மனமே, நீ, முருடுடையையாய் இருக்கின்றாய்; என்னொடு இப்பொழுது சூள்செய்தலை ஒழி; பொன்மலையைச் சேர்ந்த காக்கையும் பொன்னிறமாம் ஆதலின், கரையிடத்து, சிறிய கற்குன்றுகளும், புதர்களும், வெப்பம் மிக்க வெற்றிடமும் பொலிவிழந்து தோன்றுதற்குக் காரணமான எம் பெருமானது திருப்புனவாயிலாகிய அதனையே போற்று; பின்னர் என்னொடு சொல். கு-ரை: 'முருடு நீங்கப்பெற்று, நல்லையாவாய்' என்றபடி, கற்குன்று முதலியன புற்கென்று தோன்றுதல், திருப்புனவாயிலின் பொலிவினால் என்க. எனவே, 'புற்கென்று தோன்றும் பெரும் பரப்பில் இது பொலிவுற்று விளங்குகின்றது' என, அதன் சிறப்பை வியந்தவாறாயிற்று. 'புனவாயிலாகிய அதுவே புகல்' எனக் கூட்டுக. இதன் முதலடியின் இறுதியில், 'வைகலும்' என்பதனைச் சேர்த்து ஓதுவது, பிழைபட்ட பாடம். 5. பொ-ரை: மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி; நன்மையே வடிவமானவனும், நம்மை ஆளாக உடையவனுமாகிய சிவபெருமான் பெரிதும் உறையும் இடம், வேடர்கள், தம் வில்லின்கண் தொடுத்த அம்பினால் வெருட்ட வெருண்டு ஓடி, மான் கூடடம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே; நாள்தோறும் அதன் கண் சென்று நில்; பின்னர் என்னொடு சொல். கு-ரை: ஆட்டுதல், ஈண்டு, வெருட்டுதல்.
|