அரிசிலாறு ஓடும் அழகுக் காட்சி: "கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக் கலவம் மயிற்பீ லியுங்கா ரகிலும் அலைக்கும் புனல்சே ரரிசில் தென்கரை" (தி. 7 ப. 9 பா. 1) தன்மையணி பயிலும் தமிழ்ப் பாடல்: உயர்வு குறித்து எதுவேண்டுமானாலும் கூறலாம். கன்னிமீன் குதிக்கக் கற்பகச்சோலைக் கனி வீழ்ந்தது என்பது உயர்வு நவிற்சி. ஆனால் எளிய சூழலுக்கு ஏற்ப இயைந்த இயற்கையைத் தன்மையோடு எடுத்துரைப்பது மிகவும் அருமையுடையது. பெரிய புராணத்தில் ஆசிரியர் சேக்கிழார் இத்துறையில் துறை போகிய தன்மையைப் பல இடங்களில் புலப்படுத்துவார். தில்லை - திருவாரூர் - காஞ்சிபுரம் போன்ற தலங்களின் தன்மையை மிகமிக உயர்ந்த கற்பனைகளோடு விளக்கியவர் நந்தன் வாழும் புலைச் சேரியை எப்படி வருணிக்கிறார் பாருங்கள். புலைப்பாடியில் பழங்கூரை வேய்ந்த புற்குரம்பை பல உண்டு. கூரைமேல் கொடிச்சுரை படர்ந்துள்ளது. கீழ்மைத் தொழிலுழவர் பலரும் கூடியுள்ள இந்த இடம் அதற்கேற்ற சூழலோடு வருணிக்கப்பட்டிருக்கும் பாங்கு உளம் கொள்ளற்குரியது. நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடும் கருஞ் சிறாரின் அரைக் கசைத்த மணி ஒலி நாயின் குரைப்பொலியை அடக்கிடுமாம். கூருகிர்மெல் லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயின்முன் றிலினின்ற வள்ளுகிர்நாய்த் துற்றுபறழ் காரிரும்பின் சரிசெறிகைக் கருஞ்சிறார் கவர்ந்தோட வார்சிறுமென் குரைப்படக்கு மரைக்கசைத்த இருப்புமணி. (தி. 12 பெரிய. திருநாளைப். 7.) நாவலூரரும் தமது தேவாரத்தில் இத்தகைய இயற்கையோடியைந்த கற்பனையைத் தருகிறார். திருமுதுகுன்றத்தில் ஆளி, யானைகளின் முழக்கம் ஓயாது. குன்றத்திலே திரிந்த களிறு ஒன்றை ஆளிபிடித்துக் கொல்ல, பிடி குறத்திகள் வாழ் முன்றிலிடையே கன்றிடும் (வருந்திடும்) முதுகுன்றம் என்கிறார்.
|