பக்கம் எண் :

86
 

"மழைவள ரும்நெடுங் கோட்டி டைமத யானைகள்
முழைவளர் ஆளிமுழக்க றாமுது குன்றம்."

(தி. 7 ப. 43 பா. 6)

சென்றில் இடைச்செ டிநாய் குரைக்கச் சேடிச்சிகள்
மன்றி லிடைப்பலி தேரப்போவது வாழ்க்கையே
குன்றி லிடைக்களிறு ஆளிகொள்ளக் குறத்திகள்
முன்றி லிடைப்பிடி கன்றிடும்முது குன்றரே.

(தி. 7 ப. 43 பா. 7)

மந்தியும் கடுவனும்:

பூவும் நீரும் கொண்டு ஏத்தும் அடியார் போல ஐந்தறிவுடைய மந்தியும் செய்கிறதாம். பொன்னடியே நாளும் பூவொடு நீர் சுமக்கும் அடியார் இடர்களைவான் இறைவன். அப்பர் சுவாமிகளும் 'சலம் பூவொடு தூபமறந்தறியேன். தமிழோடிசைப்பாடல் மறந்தறியேன், நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்' (தி. 4 ப. 1 பா. 6) என்கிறார். நம்பியாரூரரும் 'நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' - (தி. 7 ப. 48 பா. 1) என்று குறிப்பிடுவார். 'பெற்றது கொண்டு பிழையே பெருக்கிப் பெருகுமன்பின் வெற்றடி யேனை விடுதி கண்டாய்' (தி. 8 நீத்தல் வி. 23) என்ற திருவாசக வரிகளும் ஈண்டு ஒப்ப நினைக்கற் பாலது. சுந்தரரும்,

"நொச்சியம் பச்சிலையால் நுரைதீர்புன லாற்றொழுவார்"

(தி. 7 ப. 98 பா. 3)

என்றருளுகிறார்.

கருதியது முடிப்பன் கங்கையணிந்த பெருமான் என்கிறார் சுந்தரர். இந்தத் தன்மையை அறிந்த மந்தியும் மலைப்புறச் சந்திகள் தோறும் சலபுட்பமிட்டு வழிபடும் காட்சி அவினாசியின் அழகுகளில் ஒன்று. மந்தி ஒன்று மாளாக் காதலோடு கடுவன் உண்ணத்தகுந்த பழங்களைத் தேடிக்கொண்டு வருகின்றதாம்.

"மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ் சலபுட்ப மிட்டு வழிபட"

(தி. 7 ப. 92 பா. 7)

"மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
முந்தி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே"

(தி. 7 ப. 43 பா. 8)