பக்கம் எண் :

851
 
526.

கற்றுளவான் கனியாய

கண்ணுதலைக் கருத்தார

உற்றுளனாம் ஒருவனைமுன்

இருவர்நினைந் தினிதேத்தப்

பெற்றுளனாம் பெருமையனைப்

பெரிதடியே கையகன்றிட்

டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்

என்ஆரூர் இறைவனையே.

9

527.

ஏழிசையாய் இசைப்பயனாய்

இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான்செய்யுந்

துரிசுகளுக் குடனாகி

மாழையொண்கண் பரவையைத்

தந்தாண்டானை மதியில்லா

ஏழையேன் பிரிந்திருக்கேன்

என்ஆரூர் இறைவனையே.

10


9. பொ-ரை: மெய்ந்நூல்களைக் கற்று நினைக்குமிடத்துச் சிறந்த கனிபோல இனிக்கின்ற, கண்ணையுடைய நெற்றியையுடையவனும், என் உள்ளத்தில் நிரம்பப் பொருந்தியுள்ளவனாகிய ஒப்பற்றவனும், முன்பு இருவராகிய மாலும் அயனும் நினைந்து நன்கு போற்றப் பெற்ற பெருமையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை, அவன் அடியேனாகிய யான் எனது ஒழுக்கத்தைப் பெரிதும் நீங்கிப் பிரிந்து, எதன்பொருட்டு, இறவாது உள்ளேனாய், இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன் விரையச் சென்று அவனை வணங்குவேன்.

கு-ரை: 'உள்ள' என்பது, இடைக்குறைந்து நின்றது, "கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்" என்றும், "ஓர்த்துள்ளம் உள்ள துணரின்" என்றும் (குறள் - 356 - 357) அருளினமையின், இறைவன் கற்று நினைக்கும் வழித் தோன்றுவோனாதல் அறிக. 'கற்றுளவான் கவியாய' என்பதே பாடம் எனலுமாம். "உளன்" என்றது, 'உடையன்' என்னும் பொருட்டாய் நின்றது. 'எற்றுக்கு' என உருபு விரிக்க.

10. பொ-ரை: ஏழிசைகளைப் போன்றும், அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும், இனிய அமுதத்தைப் போன்றும்