பக்கம் எண் :

870
 

54. திருவொற்றியூர்

பதிக வரலாறு:

தம்பிரான்தோழர், பெருமான் அருளால் மகிழமரத்தடியில் சபதம் செய்து, சங்கிலியாரை மணந்து, மகிழ்வுடனிருந்து, திருவாரூர்ப் பெருமானது வசந்த விழாவைக் காண, திருவொற்றியூர் எல்லை நீங்கியதும் இரு கண்களின் ஒளி மறைந்து, அதனால் மூர்ச்சித்து "சூளுறவு மறுத்ததால் இவ்வினை வந்து எய்தியது'. என்று எண்ணி, 'எம்பெருமானை இத்துயர் நீங்கப் பாடுவேன்' என்று நினைந்து பாடிருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய, புரா. ஏயர்கோன். புரா. 276)

குறிப்பு: இத் திருப்பதிகம் நுதலிய பொருள் இதன் வரலாற்றானே விளங்கும்.

பண்: தக்கேசி

பதிக எண்: 54

திருச்சிற்றம்பலம்

550.அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்

அதுவும் நான்படற் பாலதொன் றானால்

பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்

பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்

வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்

மற்று நான்அறி யேன்மறு மாற்றம்

ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்

ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

1

1. பொ-ரை: தலைவனே, 'ஒற்றியூர்' என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், உன் திருவடியை இடையீடின்றி யடையமாட்டாது, மாசுடைய உடம்பு கொண்டே அடைவேனாயினேன்; அவ் விழி நிலைதானும் நான் அடையத்தக்க தொன்றாகியேவிடுமாயின், ஒளியிழந்த என் கண்ணுக்கு ஊற்றத்தக்கதொரு மருந்தையேனும், என் வேண்டுகோளுக்கு விடையாக நீ சொல்லியருள்; ஏனெனில், பசு முதலிய வற்றினிடத்திற் பாலை விரும்புவோர், அவை இடுகின்ற சாணத்தை எடுத்தற் றொழிரைச் செய்தாயினும் அதனைக் கொள்வர்; அதுபோல,