பண்: தக்கேசி பதிக எண்: 55 திருச்சிற்றம்பலம் 560. | அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத | | அவனைக் காப்பது காரண மாக | | வந்த காலன்றன் ஆருயி ரதனை | | வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன் | | எத்தை நீயெனை நமன்தமர் நலியில் | | இவன்மற் றென்னடி யானென விலக்கும் | | சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன் | | செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே. | | 1 |
1. பொ-ரை: வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, முனிவன் ஒருவன் உன்னை அடைக்கலமாக அடைய, அவனைக் காத்தல் நிமித்தமாக, அவன்மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான், உனது அவ்வாற்றலையறிந்து, என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின், என்தந்தையாகிய நீ, 'இவன் என் அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்' என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். கு-ரை: 'என்னை ஏன்றுகொண்டருள்' என்பது குறிப்பெச்சம். 'உன்னை' என இரண்டனுருபும், 'அடைக்கலமாக' என ஆக்கமும் வருவிக்க. "ஆரூயிர்" என்றது, கூற்றுவனது நிலைக்கு இரங்கிய இரக்கம் பற்றி வந்தது. 'வவ்வினாய்க்கு அடியேன்' எனக்கூட்டுக. 'வவ்வினாய்க்கு' என்றதனால், வன்மை, அங்ஙனம் வவ்விய தனையே குறித்ததாயிற்று, 'வண்மை' எனப் பாடம் ஓதுவாரும் உளர். மற்று, அசைநிலை. 'நலியாதீர்' என்பது இசையெச்சம். எண்ணுதற் கருவியாகிய சிந்தையை எண்ணப்படுதலையுடைய பாரியமாகிய விலக்குதலாக ஒற்றுமைப்படுத்தோதினார். இது, மார்க்கண்டேய முனிவருக்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது.
|