பக்கம் எண் :

882
 
561.வையக முற்று மாமழை மறந்து

வயலில் நீரிரை மாநிலந் தருகோம

உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன

ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்

பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்

பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்

செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

2


2. பொ-ரை: வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இவ்வூரிலுள்ளவர், 'உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம்; எங்களை உய்யக்கொள்க' என்று வேண்ட, ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை, அந்நிலைமாறி, எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: சொற்சுருக்கங்கருதி இவ்வாறோதினாரேனும், எங்கும் மாமழை பெய்து பெருவெள்ளம் தோன்றியும் விடாதாக, இம் மழையைத் தவிர்ப்பின் மற்றும் பன்னிரு வேலி தருவோம் என்று வேண்ட' அங்ஙனமே தவிர்த்து, இரண்டு பன்னிரு வேலிகளைக் கொண்டருளும், என்றலே பொருளாதலுணர்க. 'பரந்த' என்னும் வினைப் பெயரின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அப்பெயர், 'பெய்யும்' என்னும் பயனிலை கொண்டது. இஃது இத்தலத்தில் உள்ளார்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது.

இப்பெருமானை இவ்வாறுவேண்டித் திருவருள் பெற்று, தாம் நேர்ந்தவாறே இரண்டு பன்னிரு வேலிகளை இறைவற்குக் கொடுத்தவர்களில் முதல்வர், 'ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பதனை வருகின்ற திருப்பாடலால் அறிக.