56. திருநீடூர் பதிக வரலாறு: சுவாமிகள், திருச்செம்பொன்பள்ளி, திருநின்றியூர் முதலான தலங்களை வணங்கிக்கொண்டு திருநீடூரைப் பணியாது, திருப்புன்கூர் செல்லும் பொழுது மெய்யுணர்வினால் நினைந்து, மீண்டு அதனை வணங்கச் செல்லுங்கால் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 151) குறிப்பு: இத் திருப்பதிகம் இறைவனை எவ்விடத்தும் பராக்கால் மறக்கலாகாமையை வலியுறுத்து அருளிச்செய்தது. பண்: தக்கேசி பதிக எண்: 56 திருச்சிற்றம்பலம் 570. | ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை | | ஒண்ணு தற்றனிக் கண்ணுத லானைக் | | கார தார்கறை மாமிற் றானைக் | | கருத லார்புரம் மூன்றெரித் தானை | | நீரில் வாளைவ ரால்குதி கொள்ளும் | | நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப் | | பாரு ளார்பர வித்தொழ நின்ற | | பரம னைப்பணி யாவிட லாமே. | | 1 |
1. பொ-ரை: எருது ஒன்றினை ஓர் ஊர்தியாக உடையவனும், ஒளியையுடைய நெற்றியையுடைய ஒப்பற்ற சிவபெருமானும், கருமை பொருந்திய நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும், பகைவரது ஊர்கள் மூன்றை எரித்தவனும் ஆகிய, நீரில் வாழ்வனவாகிய வாளை மீனும், வரால் மீனும் குதிகொள்ளுகின்ற நிறைந்த நீரையுடைய கழனிகளை யுடைய செல்வம் பொருந்திய திருநீடூரின்கண், நிலவுலகில் உள்ளார் யாவரும் துதித்து வணங்குமாறு எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம். கு-ரை: 'ஆகாதன்றே' என்பது, எதிர்மறை எச்சமாயும் ஏனையது குறிப்பெச்சமாயும் வந்தியையும். 'விடை ஒன்று ஓர் ஊர்வது
|