பக்கம் எண் :

899
 

57. திருவாழ்கொளிபுத்தூர்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருமண்ணிப்படிக்கரையைத் தொழுது திரு வாழ்கொளிபுத்தூர் செல்லாமல் திருக்கானாட்டு முள்ளூருக்குச் செல்லும்பொழுது நினைந்து, மீண்டு வாழ்கொளி புத்தூர் செல்லும்பொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 118)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரையன்றி நினைத்தற்குரிய பொருள் வேறில்லையாதலை நினைந்து அருளிச்செய்தது.

பண்: தக்கேசி

பதிக எண்: 57

திருச்சிற்றம்பலம்

581.தலைக்க லன்தலை மேல்தரித் தானைத்

தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்

கொலைக்கையா னையுரி போர்த்துகந் தானைக்

கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை

அலைத்தசெங் கண்விடை ஏறவல் லானை

ஆணை யால்அடி யேன்அடி நாயேன்

மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

1


1. பொ-ரை: தலையாகிய அணிகலனைத் தலையில் அணிந்தவனும், தன்னை எனக்கு நினைக்குமாறு தருபவனும், கொலைத் தொழிலையும், கையையும் உடைய யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனும், கூற்றுவனை உதைத்த, ஒலித்தல் பொருந்திய கழலை யணிந்த திருவடியை உடையவனும், எதிர்த்தவரை வருத்தும் சிவந்த கண்களையுடைய இடபத்தை ஊர வல்லவனும் ஆகிய, பயிர்கள் தம் தலைமேற்கொண்ட செந்நெற்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, அவன் ஆணை வழியே அவனுக்கு அடிமையானேனாகிய அடிநாய் போன்ற யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.