582. | படைக்கட் சூலம் பயிலவல் லானைப் | | பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக் | | கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக் | | காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச் | | சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத் | | தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை | | மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர் | | மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | | 2 |
கு-ரை: 'எனக்கு' எனற்பாலது, "என்னை" என உருபு மயக்கமாய் வந்தது. "குரை" முதனிலைத் தொழிற்பெயர். சிவபெருமானுக்கு விடை, அறக்கடவுளும், திருமாலும் ஆதலின், தீயவரை அலைத்தல் இருவழியும் ஏற்றல் அறிக. இவற்றைச் செலுத்துதல் பிறரால் ஆகாமை யறிக. "ஆணையால்" என்ற மூன்றாவது "அடியேன்" என்ற இறந்த கால வினைக் குறிப்புப் பெயரைக் கொண்டது. அடிநாய் - அடிக்கீழ்க் கிடக்கும் நாய். 2. பொ-ரை: படைகளுள் சூலத்தைப் பழக வல்லவனும், தன்னை நினைவாரது உள்ளத்தில் பரவி அகப்படுத்துக் கொள்பவனும், வாயில்களில் நின்று ஏற்கும் பிச்சைக்கு விரும்புதலைச் செய்பவனும், காமனது உடலை அமைப்பு அழியச் செய்தவனும், கங்கையைச் சடையில் தங்கும்படி வைத்தவனும், தண்ணிய நீரையுடைய மண்ணியாற்றின் கரையில் இருப்பவனும், எல்லாத் தகுதிகளையும் உடையவனும் ஆகிய, நீர்மடைகளில் நீலோற்பல மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். கு-ரை: "படைக்கண்" என்ற கண்ணுருபு, 'உள்' என்னும் பொருளதாய் வந்தது. சூலம் முத்தலை வேலாதலின், ஏனைய படைகளிலும் சிறந்தது என்க. "பாவிக்கொள்ளுதல்" என்பது, மூடிக்கொள்ளுதல், சுற்றிக் கொள்ளுதல் முதலியன போல்வது. "இச்சை காதலித்தான்" என்றது, "அணியலும் அணிந்தன்று" (புறம் - கடவுள் வாழ்த்து) என்றாற்போல நின்றது. தாழ்தல் - தங்குதல்.
|