உ சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 2 சுந்தரர் தேவாரப் பொருளாராய்ச்சி செஞ்சொற்கொண்டல், வித்துவான், முனைவர் சொ. சிங்காரவேலன் எம். ஏ., மொழியாராய்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். உயிர்த்துணை: உள்ளம் கனிந்தபோது அக் கனிவைக் கவிதையாக்குவோர் அருளாளர்கள். அக் கவிதைகள் தாம் எவ்விடத்தினின்று மலர்ந்தனவோ, அவ்வருட்கனிவோடு கமழ்வன. தம்மைப் பயில்வோர்க்கும், சொல்லிய பொருள் உணர்ந்து சொல்வோர்க்கும் அத்தகு கனிவை அவைதாமும் வழங்குவன. அக் கவிதைகளை ஆழ உணர்தல் நம் வாழ்விற்கு உறுதுணையாம் தன்மை உடையன. அவர்கள் அடைந்த அநுபவங்களை நம் மாட்டும் நிகழ்த்தும் பெற்றியன அவ்வுயர் கவிதைகள். வாழ்வெனும் புயலிற் சிக்கி வழி தெரியாது மயங்கும் மனித குலத்திற்குக் கிடைக்கும் திசைகாட்டிகள் அவை; வாழ்வின் துயர வெயிலால் வாடிக் கருகும் நெஞ்சங்கட்கு உயிர்த் தழைப்பை உண்டாக்கும் வானமழைத்துளிகள் அவை. இவ்வருட் கவிதைகளாகிய தமிழ்ப் பக்திப் பாடல்கள் அவ்வுணர்ச்சியை எடுத்துரைப்பன மட்டும் அல்ல; உலக சகோதரத்துவத்தை, வையகப் பணி நெறியை எடுத்துகாட்டும் அருநெறி. காணும் உயிர்க்குலங்கள் அனைத்தி னூடும் இறைவனைக் காணத் தூண்டும் உயர்நெறி. அன்பையும் தொண்டையும் இணைக்கும் திருநெறி. ஆம், இந்த நெறியையே இவ்வருளாளர்களின் கவிதைச் செல்வங்கள் காட்டுகின்றன. தமிழ்ப் பெருமக்கட்கு இந்தப் பேறு வளமாக வாய்த்திருக்கிறது. பன்னிரு திருமுறைகளும் தமிழ் உலகிற்குக் கிடைத்துள்ள உயர் கருவூலங்கள்; ஞான பண்டாரங்கள். சைவத்திற்கு வாய்த்த இம் மூல பண்டாரங்களை அவ்வப்போது தஞ்சம் புகுந்தால், பெறும் பலன்கள்,
|