பக்கம் எண் :

906
 
590.திருந்த நான்மறை பாடவல் லானைத்

தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்

பொருந்த மால்விடை ஏறவல் லானைப்

பூதிப் பைபுலித் தோலுடை யானை

இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்

ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்

மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

10


கு-ரை: காளை, சினத்தினால் மண்ணைக் கோட்டினாற் குத்துமாகலின், கயிலையை எடுத்த இராவணனுக்கு அஃது உவமையாயிற்று.

'காளையாகி' என்னும், ஆக்கம், உவமை குறித்து நின்றது, 'பாளைத்தெங்கின்' என்னும் தகரமெய், தொகுத்தலாயிற்று. "சேடெறிந்து" என்றதனை, 'சேடெறிய' எனத் திரிக்க.

10. பொ-ரை: நான்கு வேதங்களையும் செவ்வனே பாட வல்லவனும், தேவர்க்கும் அறிதற்கு அரியவனும், பெரிய விடையினை ஏற்புடைத்தாமாறு ஏற வல்லவனும், திருநீற்றுப் பையும், புலித் தோலுமாகிய இவற்றையுடையவனும், இருந்து உண்கின்ற சாக்கியரும், நின்று உண்கின்ற சமணரும் இகழ நிற்பவனும், அரிய உயிர்கட்கெல்லாம் அமுதம் போல்பவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

கு-ரை: நின்று உண்ணுதல் சமணர்க்குரிய நோன்பாயினமை போல, இருந்து உண்ணுதல் சாக்கியர்க்குரிய நோன்பாயிற்றில்லை யாதலின், "இருந்துண்" என்றது, 'உண்டு கிடந்து வாளா மாய்தலேயன்றி, எம் பெருமானை இகழ்ந்து குற்றத்தின் வீழ்ந்தொழிகின்றார்' என, அவரது உணவின் இழிபு கூறியவாறாம் என்க.

உயிர்களை, மலமாகிய நஞ்சின் வேகத்தைக் கெடுத்து உய்யக்கொள்பவனாதலின், 'ஆருயிர்க்கெல்லாம் மருந்தன்னான்றனை' என்றும், 'அவனினும் இனியதொரு பொருளும் உண்டோ' என்பார், 'மறந்து என் நினைக்கேன்' என்றும் அருளிச்செய்தார்.