பக்கம் எண் :

908
 

நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்

நங்கை சிங்கடி தந்தைப யந்த

பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேற்

பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே.

12

திருச்சிற்றம்பலம்


மிகுகின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனும், இறைவனை உளங்குளிர்ந்து பாடும் தமிழையுடையவனும் ஆகிய நம்பியாரூரன், 'வளமை மிக்க சோலைகளையுடைய திருவாழ் கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதனை நினைப்பேன்' என்று சொல்லிப் பாடிய, பயன் மிகுந்த இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களிடத் தினின்றும், அவர்கள் செய்த பாவங்கள் திண்ணமாகப் பறந்து நீங்கும்.

கு-ரை: 'நினைக்கேன் என்று பயந்த உளங்குளிர் தமிழ், பலங்கிளர் தமிழ்' எனக்கூட்டித் தனித்தனி இயைத்து முடிக்க. பாடுதலை, 'பயத்தல்' என்றார், கவிகளை 'எச்சம்' எனக் கூறும் வழக்குப் பற்றி. "கல்வியே கற்புடைப் பெண்டிர் அப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே ஈர்ங்கவியா" என்ற நீதிநெறிவிளக்கமும் (3) இங்கு நினைக்கற்பாலது. 'வனப்பகை அப்பன், சிங்கடி தந்தை' என, பொருட் பின் வருநிலையணியாக, ஒருங்கியைக்க. 'நங்கை' என்றது, "வனப் பகை" என்றதனோடும் இயையும். "நலம்" என்றது, அதனைத் தருவதாய விளையுளின்மேல் நின்றது. பலம் - பயன். 'பாடவல்லார் மேனின்றும்' என, உருபு விரிக்க. "தான்" என்றது, தேற்றப் பொருட்டாய், "பறையும்" என்றதனோடு இயைந்தது என்க.