உள்ளே கலந்து நிற்பவனும், எட்டுவகைப் பொருளாய் நிற்கும் ஒருவனும், காதில் வெள்ளிய குழையை அணிந்தவனும் ஆகிய எங்கள் தலைவனை, அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, ஊழிக்காலத்தில் உலகத்தைக் கடல் கொள்ளவும் தான் கொள்ளப்படாது மிதந்து நின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வள நகரிடத்திற் கண்டு கொண்டேன்; அதனால் இனி ஒரு குறையும் இலனாயினேன். கு-ரை: ஈற்றில் வருவித்து உரைத்தது குறிப்பெச்சம். 'இரண்டனையும்' என்னும், உம்மை எண்ணின் தொகைச்சொல், தொகுத்தலாயிற்று. வகுத்தல் - ஆக்குதல். 'தந்த எம் தலைவனை, வைத்த எம்மானை, ஒருவனாகிய எங்கள் பிரானை' எனப் பலவாற்றாற் சொல்லி மகிழ்ந்தார் என்க. நன்கு மதித்தலாவது தன்னோடு இணையொத்தவளாக உணர்தல். அவ்வாறுணர்தற்கு அவள் அவனின் வேறல்லளாயினும், உயிர்கள் அவளை உணருமாற்றானன்றித் தன்னை யுணரலாகாமையின், அவற்றின் பொருட்டுத்தான் அவளை அவ்வாறு வேறுவைத்து உணர்வன் என்க. மனம் அயலதாதலாவது, அவனை எட்டுதற்கு இயைவதாகாமை. அவன் அதனுட்கரந்து நிற்றலாவது, உயிர்வழியாக அதனையுந் தன் வழிப்படுத்துதல். எண் வகை - அட்ட மூர்த்தம்; அவை, 'ஐம்பெரும் பூதங்களும், இரு சுடர்களும், உயிரும்' என இவை. இவைதாம் விரியாற் பலவாமாகலின், "எண் வகை" என்று அருளினார். 'ஒருவனாயிருந்தே இங்ஙனம் பலவாகின்றான்' என்பார், "எண்வகை ஒருவனை" என்று அருளிச்செய்தார். கழுமலம் - சீகாழி; இஃது; இஃது ஊழி வெள்ளத்தில் தோணி போல மிதந்தமையின், 'தோணிபுரம்' எனப் பெயர்பெற்றமை உணர்க. "கருமை பெற்றகடல் கொள்ள மிதந்ததோர் | காலம் மிதுவென்னப் | பெருமை பெற்றபிர மாபுரம்" |
துயர்இ லங்கும்உல கிற்பல ஊழிகள் | தோன்றும் பொழுதெல்லாம் | பெயர்இ லங்குபிர மாபுரம்" |
(தி. 1 ப 1 பா. 5, 8)
|