பக்கம் எண் :

913
 
595.திருத்தினை நகருறை சேந்தனப் பன்னென்

செய்வினை யறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்

ஒருத்தனை யல்லதிங் காரையு முணரேன்

உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்

விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி

விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்

கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

3


என்னும் பொருளதாயினும், ஈண்டு, 'அறிவு' என்னும் பொருளதாய் நின்றது; இது வடசொல். "கற்பித்தாய்" என்றது, 'கற்கச்செய்தாய்' என்னும் பொருளதாகிய தமிழ்ச்சொல்; இஃது 'அறிவித்தாய்' என்னும் பொருட்டு. "அருங் கற்பனை கற்பித்தாண்டாய்" (தி. 8 திருவா. கோ. மூ. தி. 7) என்புழியும் இவ்வாறே கொள்க.

3. பொ-ரை: திருத்தினை நகரின்கண் எழுந்தருளியிருக்கின்ற, முருகக்கடவுட்குத் தந்தையும், என்னுடைய முன்னை வினைகளை யெல்லாம் விலக்குகின்ற, செம்பொன்போலும் சிறப்புடையவனும், அழகிய பொன்போலும் திருமேனியையுடைய ஒப்பற்றவனும் ஆகிய எங்கள் சிவபெருமானையல்லது வேறு யாரையும் யான் இவ்வுலகில் இறைவராக உணரேன்; யான் உய்யுங் காரணங் கூடினமையால் இத்தகைய உணர்வைப் பெற்றேன்; ஆயினும், விருத்தனும், பாலனும் ஆகிய அவனை, யான் கனவில் என் அருகே கண்டு, நனவில் எங்குங் காணமாட்டாது பிரிந்திருந்தேன்; இதுபோழ்து, யாவர்க்கும் தலைவனும், நடனம் புரிகின்ற திருவடிகளையுடையவனும் ஆகிய அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கடலை அடுத்துள்ள, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன்; அதனால், இனி அப்பிரிவு இலனாயினேன்.

கு-ரை: "செய்வினை" இறந்தகால வினைத்தொகை. யாவர்க்கும் முன்னே உண்மையின், "விருத்தன்" என்றும், பின்னேயும் உண்மையின், "பாலன்" என்றும் அருளினார். சித்தவடமடத்தில், உறங்குங் காலத்துவந்து சென்னிமேல் திருவடி நீட்டினமையை, கனவாக அருளினார். அதன்பின் இறைவர் நம்பியாரூரருக்கு விழிப்பின்கண் வந்து காட்சி வழங்கினமை இவ்விடத்தேயாதல் அறிக. வழியில் திருத்தினை நகரையும், தில்லையில் நிருத்தம் செய்காலையும் வணங்கினமையை நினைக்க.