599. | அயலவர் பரவவும் அடியவர் தொழவும் | | அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன் | | முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை | | படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப் | | புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை | | மின்னின துருவினை என்னிடைப் பொருளைக் | | கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங் | | கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | | 7 |
என் மனத்தால் அவனை விரும்பி, மெய்சிலிர்த்து, என்னை இகழா தொழியுமாறு அவனை இரந்து நின்று, முறைப்படியே வணங்கினேன்; அதனால், அரும்பும், பூவும், அமுதும், தேனும், கரும்பும் போல இன்பம் தருபவனும், யாவர்க்கும் தலைவனும், அறவடிவினனும், எனது பிறவியை வேரோடு அறுப்பவனும் ஆகிய அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, மிக்க செந்நெல் நிறைந்த வயல்களையுடைய, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டு கொண்டேன். கு-ரை: "மனத்திடை" என்றது உருபு மயக்கம். 'குளிர்ப்பு' என்பதனை, இக்காலத்தார், 'குளிர்ச்சி' என்ப. "பிறவிவேரறுக்குங் கரும்பினை" என்றதற்கு, கருத்து நோக்கி, இவ்வாறு உரைக்கப்பட்டது. 7. பொ-ரை: மேகமும், செல்வமும் போல்பவனும், பொன்னொளியும் மின்னொளியும் போலும் திருமேனியையுடையவனும், என்னிடத்துக் கிடைத்த பொருள் போல்பவனும் ஆகிய எங்கள் பெருமானை யான் அடைய நினைந்து, அதன் பொருட்டுச் சேய்மையில் உள்ளார் அவனைத் துதிக்கவும், அண்மையில் உள்ளார் அவனை வணங்கவும், அவற்றுள் ஒன்றையும் செய்யாது, அவனைத் தங்கள் வன்மையால் அடைய முயல்பவர்கள் பின்னே சென்று, 'முயல் அகப்படும் வலையில் யானை அகப்படும்' என்று சொல்லிய அவர்களது சொல்லைக்கேட்டு, அவ்வழியையே முற்றிலும் கடைப்பிடித்து, அவனிடத்து அன்புடையாரது தோற்றத்தை மேற்கொண்டிருந்தேன்; ஆயினும், எனது முன்னைத் தவத்தால், அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கயல் மீன்களும், சேல்மீன்களும் வயலின்கண் விளையாடுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன்; அதனால் எண்ணம் கைகூடப்பெற்றேன்.
|