தொகையே, திருத்தொண்டர் திருவந்தாதியாய் கிளைத்துத் திருத்தொண்டர் புராணமாய் விளைந்தது. அப் புராணம் ஒரு தனி உலகம். அதனுள் சாதி, இனம், அரசன், துறவி, இல்லறத்தான் என்ற உலகியல் வேற்றுமைகளுக்கு எள்ளளவும் இடம் இல்லை. 'தொண்டர் குலம்' என்ற ஒரு பெருந்தரத்தில் உயர்ந்து நிற்கும் பெரியோர் அவர் எல்லாம். 'செயற்கரிய செய்வார் பெரியர்' என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க, அருஞ்செயல் புரிந்த ஆன்ம வீரர்களின் அருள் வரலாறு அது, சேக்கிழார் பெருமானும் இக் குறிப்பினை விளக்கும் இடங்கள் சிலவும் பெரிய புராணத்துட் காணலாம். தம்முடைய பேரறிவு திருவருளால் துலங்க, நாடிடையிட்டும் காடிடையிட்டும் நிகழ்ந்த அனைத்தையும் உணர்ந்து, மிகச் சுருங்கிய அளவில், அடைமொழிகள் தக்கன புணர்த்து, அருளப்பெற்றது திருத்தொண்டத் தொகை. அநுபவம் எய்த: அருளாளர்கள் பாடிய தமிழ் அருட்கவிதைகள் அனைத்திற்கும் பொதுவாகப் பல்கலைச் செல்வர் பேராசிரியர், திரு. தெ. பொ. மீ, அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இவ்விடத்திற் சிந்தித்தற்கு உரிய செப்பம் உடையன; 'இலத்தீன் மொழி சட்டத்திற்கும், ஆங்கிலம், செருமன், பிரஞ்சு முதலியன அறிவியலுக்கும், சோவியத் மொழிகள் ஏகேசுவர வாதத்திற்கும், வடமொழி இலக்கணம், மெய்ப்பொருள் முதலியனவற்றிற்கும், தமிழ் ஆன்மீகக் கிளர்ச்சிக்கும் மிக வாய்ப்பான மொழிகள். 1இம்மொழிகளை ஆழக் கற்றாலொழிய இவற்றை உணர முடியாது. இவ்வாறே தமிழ் அருளாளர்களது தமிழ்க் கவிதைகளைப் பயிலுங்கால், நாம் அவர்கள் கண்ட அநுபவங்களை எய்துகின்றோம்; இறைவனோடு இரண்டறக் கலந்த அவர்களுடைய இனிய அருட்பேறுகளை உணர்கிறோம்".
1. "If the reality of law cannot be appreciated without a study of Latin; If science cannot be fathomed without a study of English, French and German; if monotheism cannot be understood without a study of Soviet Languages; if Philosophy and grammar cannot be admiblue without a study of Sanskrit, the depth of the literature of hymns or soul-stirring songs cannot be Plumbed except through Tamil, when we read the Poems of the Tamil Saints, thanks to their Poetry, we experience, perhaps as it were in a dream, their mystic communion with God." -Prof. T.P.M's - Sixty first Commemoration Volume - 1961-p.46.
|