பக்கம் எண் :

93
 

ஆய்வு பலவகை:

பழந்தமிழ்ப் பேரறிஞர்கள் பொருள்களை ஆராய்ந்துள்ள திறம் பலவாகும். அவற்றையெல்லாம் பொருள் ஆராய்ச்சியின் கூறுகள் எனலாம். உரையாசிரியர்களும் பிறரும் மேற்கொண்டுள்ள பொருளாராய்ச்சி நெறியும் மிகப் பலவாக விரிந்து விளங்குகின்றன. ஆராய்ச்சி என்பது அவரவர் அநுபவப் போக்கைத் தழுவி நிற்பது. ஆதலால், இப் பொருளாராய்ச்சித் திறமும், அவரவர் அநுபவங்கட்குத்தக தனித்துநின்று ஒளிரும்.

மலரைக் காண்பார் ஒருவர் அதன் மணம் ஒன்றில் மட்டுமே ஈடுபட்டுநின்று, அனைத்து மலர் மணத்தையும் ஒப்பிட்டு, ஆய்தல் ஒருவகை; அதன் இதழ்கள், உள் அமைப்பு, புற அமைப்பு, அவற்றின் எண்ணிக்கை முதலியன கண்டு ஒப்பிட்டு, அவ்வளவில் செல்லல் மற்றொருவகை. அம்மலரின் ஊடும் அருள் ஒளிவழங்கும் இறைவனைக் கண்டு, "பார்க்கின்ற மலர் ஊடும் நீயே இருத்தி" என்று தொழுது அகங்கனிந்து அதைப் பறிக்கவும் அஞ்சும் கனிந்த நிலை பிறிதொன்று. 1இனி, அம்மலரும் இறைவன் தன் திருவடி போற்றத் தந்ததே என்று கொண்டு, 'இட்டுக் கொள்வன பூவுள நீர் உள' என்று எண்ணிச் 'சலம் பூவொடு தூபம் மறந்தறியாது' வழிபடல் வேறொரு வகை. அம் 'மலரினும் மெல்லிது காமம்' என்றுணர்ந்து அச்செவ்வி தலைப்படும் சிலரின் தாமும் ஒருவராதல் இன்னொரு வகை.

இன்னொரு பொருள் ஆராய்ச்சி ஒவ்வொரு நிலையில், ஒவ்வொரு போக்கில் விரிந்து கொண்டே செல்லக் காணலாம், எல்லோரும் கூறும் அடிப்படை ஒன்றே. அதன்மீது எழும்பும் ஆய்வே பலப்பல. அவை அவரவர் அநுபவப் போக்கிற்குத் தக ஆழ்ந்தும். மிதந்தும், தழுவியும், தழைந்தும், அகன்றும், விரிந்தும் செல்கின்றன.

இது போன்றதே பாட்டாராய்ச்சியும் எனலாம். சுந்தரர் செந்தமிழ் ஒரு இலக்கியக் கருவூலம், அருட்பெட்டகம். அதனை ஆய்ந்து நலம் பகுக்கும் ஆராய்ச்சியும் பல திறப்பட்டுச் செல்லும், ஆயினும் அப்பொருள் ஆராய்ச்சி தன் அடிநிலையாய அவ்வருளியல் திருப்பாட்டையே கொண்டு திகழும் என்பது மெய்ம்மை.


1. தாயுமானவர்.