எட்டுவகை; எட்டிறந்த பல்வகை: திருக்கடைக்காப்பு என்றும், தேவாரம் என்றும், திருப்பாட்டு என்றும் மூவர் தமிழை முறையே வழங்கும் வழக்கும் தமிழ் உலகில் உண்டு1. திருப்பாட்டு என்னுந் தகுதிபெற்ற சுந்தரர் செந்தமிழ்க் கவிதைகளை, அவற்றில் ஆழ்ந்து பயின்ற இரு பேராசிரியர்கள் இரு முறையிற் பகுத்து ஆய்ந்துள்ளார்கள். ஒருவர் 'சந்தனப் பொதியத் தட வரைச் செந்தமிழ்ப் பரமாசாரியர்' எனப் பாராட்டப் பெறும் தமிழ் முனிவர்: மற்றவர் சித்தாந்தச் செந்நெறியில், சிவஞானபோதம் சிறந்து சிவஞானசித்தி கைவரப்பெற்றுச் சிவம் பிரகாசிக்கப் பெற்ற சைவத் தவ முனிவர்; தமிழ் முனிவரும், தவமுனிவரும் ஆகிய இவ்விருவர் மூவர் தேவாரத்தையும் முறையாக ஆராய்ந்துள்ளனர். தமிழ் முனிவர் ஆய்ந்த நெறி எட்டு வகையான். தவமுனிவர் ஆய்ந்த நெறி எட்டிறந்த பலவகையான். இது தொல்காப்பிய ஆராய்ச்சிநெறியை ஒத்துள்ளமை தமிழ் உலகம் அறிந்து இன்புறுதற்குரியதாகும். அகத்தியனாரும், உமாபதி தேவநாயனாரும் ஆகிய இவ்விரு பெருஞ் சான்றோர் இயல் நெறி நின்று, சுந்தரர் திருப்பாட்டினை மட்டும் இங்குச் சுருங்கிய நிலையில் ஆய்தலே குறிக்கோள். அகத்தியனார் நெறி: ஆசிரியர் அகத்தியனார், (மூவர்க்குப் பிந்திய முழுமுதல் அறிஞர்) எட்டுவகையான் ஆய்ந்தனர். அவை பின்வருவன; (1) குருவருள், (2) வெண்ணீறு, (3) அஞ்செழுத்து, (4) கோயில், (5) சிவன் உருவம், (6) திருவடி, (7) அருச்சனை, (8) அடிமை. இப் பொருளைப் பின்வரும் பழைய பாடலும் அழகுறத் தொகுத்து அமைத்துள்ளது: குருவருளும் வெண்ணீ றெழுத்தஞ்சும் கோயில் அரனுருவும் என்தலைமே லாக்கும் - திருவடியும் சிட்டான அர்ச்சனையும் தொண்டும் சிவாலயர்க் கென்று இட்டார் அகத்தியனார் எட்டு. -அகத்தியர் தேவாரத்திரட்டு -காசிமடத்துப் பதிப்பு - 1956. ப. 9
1. Religion and Philosophy of Tevaram Book I. Dr. Dorairangasamy M.A., Ph.D., 1958p.31.
|