பக்கம் எண் :

95
 

இவ்வெட்டு நிலைகளும் சீவன் முத்தர்களின் நிலை ஆகும். இந்நிலையினை உட்கொண்ட தேவாரத் திருப்பதிகங்களை அகத்திய மாமுனிவர் சிவாலய முனிவர்க்கு ஓதியருளினார் என்பது வரலாறு. இவ்வெட்டுவகையான ஆராய்ச்சியும், சிவஞானம் கைவரப் பெற்ற அருட்பெருஞ்சித்தராக விளங்கிய அகத்திய முனிவர்க்கு வாய்க்கப் பெற்றது.

உமாபதி நாயனார் நெறி:

இனி, எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தமைந்த உமாபதி தேவ நாயனார் சைவ சந்தான ஆசிரியர்களில் நான்காமவராக விளங்கும் அருளாளர். சித்தாந்த அட்டகம் எனப் புகழப்பெறும் மெய் கண்ட நூல்கள் எட்டினையருளிய நல்லாசிரியர் - திருவருட்பயன் என்ற சாத்திர நூலின்கண் தாம் கொண்ட நிலைகளையே மூவர் தமிழ்க்கும் சார்த்தி விளக்கியுள்ள, இந்நாயனார் தொகுத்த திருமுறைத் திரட்டு பெருஞ்சிறப்புடையதாய்த் திகழ்கின்றது. (1) பதிமுதுநிலை (2) உயிரவைநிலை (3) இருண்மலநிலை (4) அருளதுநிலை (5) அருளுருநிலை (6) அறியுநெறி (7) உயிர்விளக்கம் (8) இன்புறு நிலை (9) அஞ்செழுத்தருள்நிலை (10)அணைந்தோர்தன்மை என்பன இந்நிலைகளின் பெயர்கள். கோயிற் புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம் முதலியனவும் இந்நாயனார் அருளிய நற்பனுவல்கள். பௌட்கர விருத்தி எனப்பெறும் வட மொழிப் பேருரையும் இப் பெருந்தகையார் வரைந்ததேயாகும். இவ்வாறு இரு நெறிக்கண்ணும் அமைந்த சுந்தரர் தேவாரப் பொருள் அமைப்பு முறையை எடுத்துக்காண்டலும் காட்டலும், 'இறைவனடி அடைவிக்கும் எழின்ஞானபூசை' யாகவே கருதி மேற்கொள்ளத் தக்கனவாகும்.

இரண்டிலும் ஒன்றாம்:

இவ்வாய்வு நிலைகளிற் பெரிதும் பொருந்தும் திறம் உடையனவாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.

1.குருவருள்-பதிமுதுநிலை
அருளதுநிலை
2. அஞ்செழுத்து-அஞ்செழுத்தருள் நிலை
3. சிவனுருவம்-அருள் உருநிலை
4. திருவடி-இன்புறுநிலை
5. தொண்டு-அணைந்தோர் தன்மை