608. | பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று | | பொருளுஞ் சுற்றமும் போகமு மாகி | | மெள்ள நின்றவர் செய்வன வெல்லாம் | | வாரா மேதவிர்க் கும்விதி யானை | | வள்ளல் எந்தமக் கேதுணை யென்று | | நாணா ளும்அம ரர்தொழு தேத்தும் | | அள்ள லங்கழ னிப்பழ னத்தணி | | ஆரூ ரானை மறக்கலு மாமே. | | 6 |
கு-ரை: செறிவு - நிறைவு; அது பொருள்களை நிரம்ப உணரும் கல்வியைக் குறித்தது, 'சிக்கன' என்பது, இறுகப் பற்றுதல். பேரறங்களைச் செய்வார்க்கு முதற்கண் விதித்த வாழ்நாள் மிகுதலும், பெரும்பாவங்களைச் செய்தார்க்கு அது குறைதலும் உளவாதல் பற்றி, "வாணாள் மேற்செல்லும் வஞ்சனை யுண்டேல்" என்று அருளினார். இதனை, 'கொல்லாமை மேற்கொண்டொழுகு வான் வாழ்நாள்மேற் - செல்லா துயிருண்ணுங் கூற்று' என்னும் திருக்குறளாலும் (326), அதன் உரையாலும் அறிக. வாழ்நாள் இடைமுரிய வருவதனை, 'அவமிருத்து' என்ப. "அறிவு", "உயிர்" என்றவிடத்திலும், 'உண்டேல்' எனப் பாடம் ஓதுதலே சிறக்கும். 6. பொ-ரை: எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு, செல்வமும், படைகளும், இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற, நன்னெறியாய் உள்ளவனாகிய, தேவர்கள் நாள்தோறும், 'வள்ளல்' என்றும், 'எங்களுக்குத் துணை' என்றும் சொல்லித் துதிக்கின்ற, சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணையிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! கு-ரை: "பொள்ளல் உடல்" என்றது, அதன் நிலையாமையை உணர்த்தியவாறு. பொருளாய் நிற்பவர், மக்கள்; அது, "தம் பொருள் என்பதம் மக்கள்" (குறள் - 63.) என்றதனானும் அறிக. "சுற்றம்" என்றது, 'சுற்றி நிற்கும் படை' எனப் பொருள் தந்தது; படைபோல்பவர் கிளைஞரும், நண்பரும், அவர் படைபோன்று உதவுதல் வெளிப்படை. போகமாய் நிற்பவர் மாதர், இவர் எல்லோரும் தாமே தாங்குவார் போன்று நின்று தம்மிடத்தே பிணித்துக்கொள்ள முயலுதலின், அவர் செய்வன மயக்கமாயின.
|