444. | எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிறர் என்சொலார் பத்தியி னால்இடு வாரி டைப்பலி கொள்மினோ எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல் முத்திமுத் தாறு வலஞ்செய் யும்முது குன்றரே. | | 10 |
445. | முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப் பித்தனொப் பான்அடித் தொண்ட னூரன் பிதற்றிவை தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார் எத்தவத் தோர்களும் ஏத்து வார்க்கிட ரில்லையே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: எப் பக்கங்களிலும் அலைபுரண்டு செல்லும்படி இரு கரைகளின்மேலும் மோதுகின்ற முத்தியைத் தருகின்ற முத்தாறு வலம்சூழ்ந்து செல்கின்ற திருமுதுகுன்றத்து இறைவரே, ஒன்றையும் நீக்காது எல்லா இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்றால், பிறர் என்ன சொல்லமாட்டார்கள்? ஆகையால், அன்போடு இடுகின்றவர் இல்லத்தில் மட்டும் சென்று பிச்சை வாங்குமின். கு-ரை: இதனால், இறைவன் பகுப்பின்றி எல்லார்க்கும் திருவருள்புரிய முற்படுகின்றான்; ஆயினும், அவரவர் இயல்பால், அதன அடைவோரும், அடையாதவரும் ஆகின்றனர் என்பது உணர்த்தப்பட்டது. 11. பொ-ரை: முத்தியைத் தருகின்ற முத்தாறு வலமாகச் சூழ்ந்து ஓடுகின்ற திருமுதுகுன்றத்து இறைவரை, அவர் திருவடிக்குத் தொண்டனாய் உள்ள, பித்துக்கொண்டவன் போன்ற நம்பியாரூரன் பிதற்றிய இப்பாடல்களை, தத்துவஞானிகளாயினும், பிறழாத உள்ளத்தை உடைய அன்பர்களாயினும், எத்தகைய தவத்தில் நிற்பவராயினும் பாடுகின்றவர்களுக்கு, துன்பம் இல்லையாகும். கு-ரை: பித்தன்ஒத்தல், அப்பெருமானையே அடைய விரும்பி நிற்றல். பிதற்றுதல், அன்புமீதூர்வால், புகழ்வனவற்றைப் பழிபோலக் கூறுதல். ''ஆயினார்'' என்றது, எழுவாய் என்பது படவந்ததோர் இடைச்சொல். மூன்று பெயர்களிடத்தும், விகற்பப் பொருள்தரும், 'ஆக' என்பது வருவிக்க. தத்துவ ஞானிகள், நூல்களின் வழித் தத்துவத்தினை நன்குணர்ந்தவர். தடுமாற்றிலார், ஞானத்தின் முதிர்ச்சியால், இறைவனையன்றி வேறொரு பொருளைப் பொருள் என எண்ணாதவர். தவத்தோர், தத்துவ ஞானம் பெற முயல்பவர்.
|