60. திருவிடைமருதூர் பதிக வரலாறு: சுவாமிகள், திருப்புகலூரில் பொன்பெற்றுத் திரும்பித் திருவாரூரை அடைந்து அமர்ந்திருந்தபின்னர், பல தலங்களை வணங்கப் புறப்பட்டு வணங்கிவருங்கால், திருவாவடுதுறையை வணங்கியபின் காவிரியின் தென்கரையில் உள்ள பல தலங்களைப் பணிந்து திருவிடைமருதூரையடைந்து இறைவரை வழிபட்டுப் பாடியருளியத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 65) குறிப்பு: இஃது உய்யும் நெறிக்கண் உள்ள பெருவிருப்பால், தம் நிலையை மறந்து, அதனை வேண்டி அருளிச்செய்தது. பண்: தக்கேசி பதிக எண்: 60 திருச்சிற்றம்பலம் 614. | கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற் | | கைப்பர் பாழ்புக மற்றது போலப் | | பழுது நானுழன் றுள்தடு மாறிப் | | படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய் | | அழுது நீயிருந் தென்செய்தி மனனே | | அங்க ணாஅர னேயென மாட்டா | | இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய் | | இடைம ருதுறை எந்தைபி ரானே. | | 1 |
1. பொ-ரை: என் அப்பனே, திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே, கழுதையானது குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால், அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி, அனைவரும் நகைப்பர்; அது போல, அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந்தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல, இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேனாயினேன்; 'மனமே, நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய்' என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும், 'அங்கணனே, அரனே' என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு, நீ, மனம் இரங்கி, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.
|