பக்கம் எண் :

933
 
615.நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே

நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்

அரைத்த மஞ்சள தாவதை யறிந்தேன்

அஞ்சி னேன்நம னாரவர் தம்மை

உரைப்பன் நானுன சேவடி சேர

உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத

இரைப்ப னேனுக்கொர் உய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

2


கு-ரை: 'நகைப்பர்' என்பது, "கைப்பர்" என முதற்குறையாய் வந்தது. இனி, 'கைத்தல், வெறுத்தல்' என்றுமாம். 'பாழ்புகக் கைப்பர்' எனக் கூட்டுக. "அதுபோல" என்றது, 'அவ்வாறே பிறர் நகைக்கும் படி' என்றவாறு. 'நின் தொண்டினை மேற்கொண்டு' என்றது ஆற்றலான் விளங்கிற்று. 'பழுதாக' என்னும் ஆக்கச் சொல் தொகுத்தலாயிற்று. "என" என்றதனை, "மனனே" என்றதனோடுங் கூட்டி, இரு தொடர்ப்படுத்துக. "எந்தை பிரான்" என்றது, எந்தைக்குப் பிரான் என்னும் பொருளதாகலின், அதனாற்போந்த பொருள் இதுவே யாயிற்று.

2. பொ-ரை: திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, நரையும் மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும்; அவற்றால் இவ்வுடம்பு, அரைக்கப்பட்ட மஞ்சள் போல அழகிழந் தொழிவதாம்; இவற்றை அறிந்தேனாயினும், நன்மை இல்லாத செயல்களையே பற்றாகத் துணிந்துசெய்து இளைத்தேன். அதனால், கூற்றுவனுக்கு அஞ்சுதல் உடையனாயினேன்; ஆகவே, இதுபோழ்து நான் உன் திருவடிகளை அடைய உன்னை வேண்டுவேனாயினேன்; அறிவது அறிந்து வாழும் வாழ்க்கையைச் சிறிதும் அறியாத, ஆரவாரச் சொற்களையுடையேனாகிய எனக்கு. நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.

கு-ரை: 'மூப்பு' என்பது போல, 'நரைப்பு' என்பதும் தொழிற் பெயர். 'இன்னே வரும்' என்றது 'விரைய வரும்' என்றவாறாம். "நன்றியில் வினையே துணிந்தெய்த்தேன்" என்றதனை, "அரைத்த மஞ்சளதாவதை யறிந்தேன்" என்றதன் பின்னர்க் கூட்டுக. அரைத்து வைக்கப்பட்ட மஞ்சள், அப்பொழுது அழகிதாய் இருந்து, சிறிது நேரத்திற்குப்பின் வெளுத்துப்போவதாம், இதனை, 'வெயில் மஞ்சள் போல்' என்று எடுத்துக்கூறுதல் வழக்கு. அது, பகுதிப்பொருள் விகுதி. ஆவதற்கு, 'உடம்பு' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.