பக்கம் எண் :

934
 
616.புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்

போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்

என்னெ னக்கினி இற்றைக்கு நாளை

என்றி ருந்திட ருற்றனன் எந்தாய்

முன்ன மேஉன சேவடி சேரா

மூர்க்க னாகிக் கழிந்தன காலம்

இன்னம் என்றனக் குய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

3


ஆக்கம் உவமை குறித்தது. "உழையாது" பயன் விரும்புவார்போல, நன்றியில் வினையே செய்து, உன் திருவடிகளை அடைய விரும்பி உன்னை வேண்டுகின்றேன்' என்றபடி. இரைப்பன், வெற்றோசை செய்பவன். தனக்கு இயைபில்லாததனை வேண்டுதலின், அது வெற்றோசையாயிற்று. 'இவ்வாறாயினும், நீ கருணையாளனாதலின், என் விருப்பத்தினை நிரப்புதல் வேண்டும்' என்று வேண்டினார் என்க.

3. பொ-ரை: என் தந்தையே, திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே, புல்லின் நுனியில் உள்ள பனித்துளி, வெவ்வியவாகிய கிரணங்களையுடைய பகலவனை எதிர்ப்பட்டாற் போல்வதாகிய இம்மானுட வாழ்க்கை ஒரு பொருளாதல் இல்லை; ஏனெனில், 'இன்றைக்கு இன்பம் உளதாகும்; நாளைக்கு இன்பம் உளதாகும்' என்று நாள்தோறும் நினைந்து ஏமாறினேன்; இனிமேற்றான், எனக்கு என்ன உண்டாக இருக்கின்றது! ஆதலால், முன்பே உன்னுடைய செவ்விய திருவடியைச் சேர விரும்பாது, கொண்டது விடாத மூர்க்கனான நிலையிலே காலமெல்லாம் போய்விட்டன; இப்பொழுதே எனக்கு நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.

கு-ரை: "பொருள்" என்றதன்பின், 'ஆதல்' என்பது வருவிக்க. "இற்றைக்கு" என்றாற்போலவே, 'நாளைக்கு' என உரைக்க. "இடருற்றனன்" என்றதனால், எதிர்நோக்கியது இன்பத்தை யாயிற்று.


"இன்று நன்று நாளைநன் றென்று நின்ற இச்சையாற்
பொன்று கின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்"

என்று அருளிச் செய்ததுங் காண்க (தி. 2 ப. 99 பா. 1)

'முன்' என்பது, 'முன்னம்' என வருதல்போல, 'இன்' என்பது, 'இன்னம்' என வரும் என்க.