61. திருக்கச்சி ஏகம்பம் பதிக வரலாறு: சுவாமிகள், திருவொற்றியூரில் சங்கிலியார் பொருட்டுச் செய்த சூளுறவைப் பிழைத்துத் திருவாரூருக்குச் செல்லப் புறப்பட்டு்த் திருவொற்றியூர் எல்லையைக் கடந்தபொழுது மறைந்த கண்களைத் தரவேண்டிப் பல தலங்களிலும் வணங்கிப் பாடி, திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங்காடு திருவூறல்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து, காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திருவேகம்பத்தை அடைந்து, "கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய்' என்று வேண்டிப் பெருமான், இடக்கண் கொடுக்கப்பெற்று மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். 288) குறிப்பு: இத்திருப்பதிகம், தமக்குக் கண் அளித்த இறைவரது திருவருளை வியந்து அருளிச்செய்தது. பண்: தக்கேசி பதிக எண்: 61 திருச்சிற்றம்பலம் 624. | ஆலந் தானுகந் தமுதுசெய் தானை | | ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் | | சீலந் தான்பெரி தும்முடை யானைச் | | சிந்திப் பாரவர் சிந்தையு ளானை | | ஏல வார்குழ லாள்உமை நங்கை | | என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற | | கால காலனைக் கம்பன்எம் மானைக் | | காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. | | 1 |
1. பொ-ரை: நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும், முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை,
|