பக்கம் எண் :

946
 
631.

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்

சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்

பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்

பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை

அந்த மில்புக ழாள்உமை நங்கை

ஆதரித்து வழிபடப் பெற்ற

கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக்

காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

8


வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும் துதித்து வழிபடப்பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: செய்யும் செயல்கள்தாம் எண்ணில்லாதனவாகலின், அவற்றால் வரும் புகழ்களும் எண்ணிலவாயின.

அவைதாம் அனாதியாக வருதலின் தொல்புகழாயின. "கண்ணும்" என்ற உம்மை சிறப்பு. 'கண்ணு' என உகரச்சாரியையாகக் கண்ணழிப் பினுமாம்.

8. பொ-ரை: நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: சிந்தித்தல், இறைவனது பெருமைகள் பலவற்றை என்க. 'வினை பற்றறுப்பானை' என்பதும் பாடம்.