பக்கம் எண் :

948
 

என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி, ஏனைவழிபாடு செய்வாருள் ஒருத்திபோலவே நின்று, முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து, பின்பு, புறத்தே வழிபடச் சென்று, அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு, தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்றுவித்து வெருட்ட, வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள, அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: "எள்கலின்றி" என்ற விதப்பினால், அவள் அவனது ஒருகூறாய் நிற்கும் இயல்பு பெறப்பட்டது. "வழிபாடு செய்வாள் போல்" என்றது. அவள் வழிபடப்படுவாளே யாதலைக் குறித்தது. உகப்பு, உயிர்கட்கு உணர்வுண்டாக்குதல் பற்றி எழுந்தது என்க. அதனானே, ஓர் உயிரேனும் சிவவழிபாட்டினை எவ்வாற்றானும் ஒழியற்பாலது அன்று என்பது தெற்றென உணர்ந்து கொள்க. வெள்ளங்காட்டி வெருட்டியது, தன்னினும் தன்பெருமானை இனியனாக உணர்ந்து வழிபடும் அவளது உணர்வு நிலையினைப் புலப்படுத்துதற் பொருட்டு. "வஞ்சி" என்றருளினார், அவளது மெல்லியல்பிற்கு இரங்கி, "ஓடி" என்றது, மிக விரைந்தமையை, மெல்லிய இயல்பினளாய்ப் பேரச்சங்கொண்ட அவள்தான் அவ்வச்சங்காரணமாகச் சேணிடை நீங்க முயலாது, தன் பெருமானை விடமாட்டாளாய்க் கைகளால் மார்போடு அணைத்து இறுகத் தழுவிக் கொண்டாளாதலின், "தழுவ" என்றும், அவ்வாறு, அன்பிற்கு எல்லையாய் நின்ற அவளது உணர்வின் நிலையைப் புலப்படச் செய்த பின்னும் பெருமான் அவட்குக் கரந்து நிற்கமாட்டானாய்த் தன்கள்ளம் நீங்கி வெளி நின்றனனாதலின், "வெளிப்பட்ட கள்ளன்" என்றும் அருளினார். இங்ஙனம், இறைவி இறைவனை வழிபட்ட இவ் வரலாறு, திருக் குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துள்ளும், காஞ்சிப் புராணத் துள்ளும் விரிவாகக் கூறப்படுதல் காண்க. மேலைத் திருப்பாடல்களில் தொகுத்தருளிப்போந்த உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடுதலை, இதன்கண் வகுத்தருளிச் செய்தவாறு.

இங்ஙனம், எண்ணில் கோடி ஆகமங்களின் பயனாய் உயிர்கட்கு இன்றியமையாத முதற்கடமையாய வழிபாட்டினை உயிர்கள் பொருட்டு இறைவி என்றும் செய்து, அதனோடு அவள் என்றும் எல்லா அறங்களையும் வளர்த்து நிற்றலானே, தலங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்தது காஞ்சியாயிற்று என்க. 'வஞ்சி வெருவி' என்னாது 'அஞ்சி வெருவி' எனக் கண்ணழிப்பாரும் உளர்; அதனால் ஒரு