644. | கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக் | | கோலக் காவுள்எம் மானைமெய்ம் மானப் | | பாட ரங்குடி அடியவர் விரும்பப் | | பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன் | | நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால் | | நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர் | | காட ரங்கென நடம்நவின் றான்பாற் | | கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: ஆலம் விழுது போலும் சடைகளை யுடையவனும், கரும்பு போல இனிப்பவனும் ஆகிய, திருக்கோலக்கா வில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை, உண்மையமைந்த பெரிய பாடல்களைப் பாடும் வழிவழி அடியவர் பலரும் விரும்புமாறு, அத்திருத் தொண்டிலே பழகும், திருநாவலூரில் தோன்றிய, வன்றொண்டனாகிய நம்பியாரூரன், உலகில் உள்ளவர்தாமும் மனம் உருகி அவனை முற்பட உணருமாற்றால் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாடிய மாந்தர், காடே அரங்கமாக நடனம் செய்பவனாகிய சிவ பிரானிடத்து உயர்கதியையும் பெறுவர்; என்றும் நீடு வாழும் இடமும் அவர்க்கு அக்கதியேயாம். கு-ரை: கோடரம் - மரக்கிளை; அஃது இங்கு, ஆலம் விழுதின் மேற்று. 'பாடல்' என்பது, எதுகை நோக்கி, 'பாடர்' எனத் திரிந்து நின்றது. 'குடி அடியவர்' என்றது, 'வழி வழி அடியவர்' என்றதனை உணர்த்தற்கு. முன்னர், 'பாடலை உடைய அடியவர்' என்றதனால், வாளா, "பயிலும்" என்று போயினார். நாட்டில் உள்ளவரை, 'நாடு' என்று அருளினார். "கதியும்" என்னும் உம்மை, முன்னர் அடையற் பாலனவாகிய பலவற்றையும் தழுவிநின்ற எச்சத்தொடு சிறப்பு. "பதி அவர்க்கு அதுவே" என்றது, 'மீளப் பிறவார்' என்றவாறு. "ஆரூரன்" என்றது, தம்மைப் பிறர்போல அருளிய வேறுமுடிபாகலின், "எம்மானை" என்றவிடத்து, இடவழுவின்மை யறிக.
|