63. பொது (நம்பி என்ற திருப்பதிகம்) பதிக வரலாறு: சுவாமிகள், திருக்கூடலையாற்றூர் தொழுது திருமுதுகுன்ற மடைந்து திருக்கோயில் வலம் கொண்டு இறைஞ்சி, "நஞ்சி யிடை" என்னுந் திருப்பதிகம் பாடிப் பெருமானிடம் பொன் வேண்டும் குறிப்பினராய் பாடியருளியது இத்திருப்பதிகம். இப் பதிகம் பாடிப் பன்னிரண்டாயிரம் பொன் பெற்றார் சுந்தரர். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 106-107) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரைப் பலவாற்றால் ஏத்தி, 'நீரே எங்கட்கு எப்பிறப்பிலும் துணை' என்று குறையிரந்து அருளியது. இதன்கண், இறைவரை, 'நம்பி' என்னும் சிறந்த பெயரால் பலகாற் சுவாமிகள் கூறி மகிழ்தல் அறிந்து இன்புறத் தக்கது. பண்: தக்கேசி பதிக எண்: 63 திருச்சிற்றம்பலம் 645. | மெய்யைமுற் றப்பொடிப் பூசியொர் நம்பி | | வேதம்நான் கும்விரித் தோதியொர் நம்பி | | கையில்ஓர் வெண்மழு வேந்தியொர் நம்பி | | கண்ணும் மூன்றுடை யானொரு நம்பி | | செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி | | திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால் | | எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி | | எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | | 1 |
1. பொ-ரை: திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே, வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய ஒப்பற்ற நம்பியே, கையில் ஒரு வெள்ளிய மழுவை ஏந்திய ஒப்பற்ற நம்பியே, கண்கள் மூன்றை உடையவனாகிய நம்பியே, செம்மை நிறம் உடைய நம்பியே, புல்லிய, சிவந்த சடையை யுடைய நம்பியே, முப்புரங்களை, நெருப்பு எழுமாறு, வளைக்கப்பட்டதொரு வில்லால் எய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.
|