647. | வருந்தஅன் றும்மத யானை யுரித்த | | வழக்குநம் பிமுழக் குங்கடல் நஞ்சம் | | அருந்துநம் பிஅம ரர்க்கமு தீந்த | | அருளின்நம் பிபொரு ளாலரு நட்டம் | | புரிந்தநம் பிபுரி நூலுடை நம்பி | | பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி | | இருந்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி | | எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | | 3 |
நம்பியே, மயக்கத்தைத் தரும் வானுலகத்தை ஆள்கின்ற, தேவர்கட்குத் தலைவனாகிய நம்பியே, முருகன் முதலிய முத்தர்கட்குத் தலைவனாகிய நம்பியே, வழிபடப்படுதற்கு ஒப்பற்ற நம்பியே, 'நீயே உலகிற்குத் தந்தை' என்று தெளிந்து உன் திருவடிகளைப் பணிந்து துதிக்கின்ற எங்களுக்குச் சிறந்து நிற்கின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். கு-ரை: 'அங்கண் அருள் நம்பி' என மாற்றியுரைக்க. 'வினை வழிப்பட்ட வானுலகு' என்பார், "மால் விசும்பு" என்று அருளினார். 'முதற்றேவர்' என்றதில், லகரம் கெடாது திரிந்து நின்றது, இசையின்பம் நோக்கி. 'ஒளியுடையவர்' என்னும் பொருளதாகிய, 'தேவர்' என்பது, ஈண்டு, 'ஞானம் மிக்கவர்' என்னும் பொருளதாய், முத்தரை உணர்த்திற்று. "தவம்" என்றது கடவுள் வழிபாட்டினை. 3. பொ-ரை: அன்று, மதத்தையுடைய யானையை அது வருந்துமாறு உரித்த நீதியை உடைய நம்பியே, ஓசையைச் செய்கின்ற கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட நம்பியே, அதன்கண் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்த அருளுடைய நம்பியே, அவ்வருளாகிய பொருள் காரணமாக அரிய நடனத்தைச் செய்கின்ற நம்பியே, முப்புரி நூலையுடைய நம்பியே, காலமும் வானமும் முதலிய எல்லாப் பொருள்களுமாய்ப் பலவாகி நிற்கின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். கு-ரை: அசுரன் யானையாய் வந்தமையின், அதனை உரித்தமை நீதியாயிற்று. 'அருளென் நம்பி' 'அருளு நம்பி' என்பனவும், 'வருநட்டம்' என்பதும் பாடம் அல்ல. 'அப்பொருளால்' எனச் சுட்டு வருவித்துரைக்க. "முழுதும்" என்றவிடத்து. 'ஆகி' என்பது தொகுத்தலாயிற்று.
|